Saturday, January 1, 2011

திருவல்லிக்கேணி - அட்டைப்படக்கட்டுரை



    ஓலைகட்டி தூது நடந்த எம்பெருமான், தன் பக்தனுக்கு சாரதியாய் இருந்து "அப்படி ஓட்டு இப்படி ஓட்டு" என்று சொல்லும் நிலைக்கும் ஆட்படுத்திக்கொண்டான் என்றால் அவன் எளிமைக்கு எல்லை நிலம் ஏது?
    பார்த்தனுக்குத் தேரோட்டியாய் - பார்த்தசாரதியாய் முறுக்கிய மீசையும், முகம் முழுக்க போரில் தன் பக்தனுக்காக ஏற்ற தழும்புகளுமாக, கருணைக் கடவுளாகக் காட்சி தரும் திருத்தலம் திருவல்லிக்கேணி.
    வங்கக் கடலோரம், வான்தொடும் கோபுரம் காட்சிதர இதோ அவன் திருக்கோயில் முன்னே இரு கரம் கூப்பி நிற்கின்றோம்.
    இத்தலத்தலத்தின் பெருமாளை நோக்கிப் பிள்ளைப் பெருமாளையங்கார் கூறுகிறார். "நீ உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்பார்த்தவர்களையும் அவர்களது குற்றங்களை மறந்து மன்னித்து உன்பால் சேர்த்துக்கொள்ளும் நீர்மைக்குணம் பெற்றுள்ளாய். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். உன்னிடம் சரணடைந்தவர்களைக் கைவிட்டதில்லை. உன் கருணைக்கும் அளவே இல்லை. அப்பேர்ப்பட்ட நீ நேர்மையில்லா கொடிய உள்ளம் பெற்ற அடியேனின் தீச்செயல்களையும் பொறுத்தருளி என்மீதும் இரக்கம் காட்டு" என்கிறார்.
    திருமங்கையாழ்வார் பதிகம் முழுவதிலும் திருவல்லிக்கேணி கண்டேன் என்று வாயாரப்பாடி பரவுகிறார்.
    வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை
        விழுமிய முனிவர்கள் விழுங்கும்
    கோதிலின் கனியை, நந்தனார் களிற்றைக்
        குவலயத்தோர் தொழுது ஏத்தும்
    ஆதியை அமுதை என்னை ஆளுடை
        அப்பனை ஒப்பவரில்லா
    மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
        திருவல்லிக்கேணி கண்டேனே!

    இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய மகாத்மியம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளசி. (பிருந்தம் என்றால் திரள் என்றொரு பொருளும் உண்டு). ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசிவனம் என்று பொருள் கொள்ளப்படும்.
    சுமதி என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குப் பெருமாளைத் தேரோட்டியாக காண ஆசை. அதற்காகத் தவம் செய்தான். அவன் தவம் செய்த இடம் திருமலை.
    வரம் கொடுக்கும் வள்ளலல்லவா.....
    ஸ்ரீநிவாஸன் அசரீரியாய் குரல் கொடுத்தார்.
    "நீ விரும்பிய தோற்றத்துடன் என்னைக் காண திருவல்லிக்கேணிக்கு வா" என்றார்.
    சுமதியும் இங்கு வந்து பார்த்தசாரதியை தரிசனம் செய்தான் என்பது வரலாறு. எப்படி தரிசனம் செய்தான் என்பதற்கு பின்வரும் கதை.
    வேதவியாசருக்கு ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி இத்தலத்திற்கு தவம் செய்ய வந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரமொன்றையும் கொண்டு வந்தார்.
    அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாகவும் மறுகை தன் திருவடியில் சரணம் அடைய அருள் புரிவதாகவும் இருந்தது.
    பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற முனிவரைக் கண்டு (சுமதி மன்னர் வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற, இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர். வலப்புறம் ருக்மிணியையும் இடப்புறம் சாத்யகியையும் வழிபட்டு அவ்விருவரும் மோட்ச உலகு பெற்றனர்.
    இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட சுமதி மன்னனும் அவ்விதமே வழிபட்டான்.
    வேங்கடவனால் காட்டப்பட்டதால், பெருமாளுக்கு "வேங்கடகிருஷ்ணன்" என்னும் திருநாமம் உண்டாயிற்று.
    திருக்கோயில் விமானம் விசேஷமானது.
    ஆனந்தவிமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தெய்வீக விமானம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
    தீர்த்தம் : அல்லிக்கேணி
    இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம். கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை. பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே பயன்படுகிறது.
இத்தலத்தில் இறைவனைக் காட்சி கண்டவர்கள்:-
    சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர், அத்திரி மகரிஷி, ஜாஜலி மகரிஷி, அநிருத்தன், மார்க்கண்டேயர், அர்ஜூனன்.
    அழகிய அல்லி மலர்கள் நிறைந்த குளத்தை சூழ்ந்ததாக அமைந்ததால் திருவல்லிக்கேணி என்ற பெயருண்டாயிற்றென்பர்.
    திருமயிலை எனப்படும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் ஒரு காலத்தில் ஒரே ஊராகக் குறிக்கப்பட்டன. மயிலைத் திருவல்லிக்கேணி என்று இரண்டு தலத்தையும் இணைத்தே திருமங்கையின் பாசுரம் இருக்கிறது.
    108 திவ்ய தேசங்களிலே தான் வளர்ந்த குல வழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்று தான். மூலவருக்கு இரண்டே திருக்கரங்கள். வலது கரத்தில் சங்கம். இடது கரத்தில் கோல்.

    வெறும் சாட்டையை வைத்துக்கொண்டல்லவா பாரதப்போர் முடித்தான். பற்றலர் வீய கையில் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை என்பது ஆழ்வார் வாக்கு.
    இங்கு ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர்.
    அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.
    மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமன் இத்தலத்தில் எழுந்தருளினார். சீதை, இலக்குவன், பரத சத்ருக்கணருடன் தொடர்ந்தனர்.
    சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர் கோலத்தில்இங்கு காட்சி தருகிறார்.
    சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கிசைந்து வேங்கடகிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.
    முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழைிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.
    மன்னுதண் பொழிலும் வாவிவும் மதிளும்
    மாட மாளிகையும் மண்டபமும்
    தென்னன் தொண்டையர்கோன் செய்த
    நன் மயிலைத் திருவல்லிக்கேணி

    என்கிற பாடலால் இக்கோயிலி்ன் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டதென்பது விளங்கும்.
    "தெள்ளிய சிங்கமாகியத் தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனென்பதும்" "பார்த்தன் தன் தேர்முன் நின்றானை" இத்தலத்துக் கண்டேனென்றும், திருமங்கையில் பாசுர வரிகளாகும்.
    திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப் பிரிந்தாள். இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு மகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் நின்றாள். முனிவர் பார்த்தார். அவருக்குப் புரிந்தது. வேதங்களில் கூறப்பட்ட தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். தக்க பருவம் வந்ததும் ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை ஏற்றுக்கொண்டார்.
    எனவே திருமணக் கோலத்தில் ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார்.
    இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது இந்த ஒரு திவ்ய தேசத்தின் மிகப்பெரிய சிறப்பு.
    வைணவத்தலங்களில் முக்கிய மூன்று தலங்களான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற முத்தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு சிறப்பு.
    இத்தலத்தை இரண்டாவது திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியைப் போல் இங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    கண்ணன் அர்ஜூனனுக்குத் தேரோட்டியாக இருந்து பீஷ்மர் விட்ட அம்புகளை அர்ஜூனனுக்காக ஏற்றுக்கொண்டதை காண்பிக்க இன்றைக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம்.

No comments:

Post a Comment