Saturday, January 1, 2011

இராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது?

- முனைவர். இரா. அன்பழகன்

    இராவணனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் எது? இராமாயணக் கதையை அறிந்தவர்கள், சீதையைச் சிறை வைத்ததுதான் என்று ஒரே வரியில் இக்கேள்விக்கு விடை கூறுவர். சரி. சீதையை, இராவணன் சிறை வைத்ததற்குக் காரணமாக இருந்தது எது? சூர்ப்பநகை செய்த சூழ்ச்சி. சூர்ப்ப நகை சூழ்ச்சி செய்ததற்குக் காரணம் எது? இராவணன் சூர்ப்பநகைக்கு்ச் செய்த தீங்கு. இராவணன் சூர்ப்பநகைக்கு என்ன தீங்கு செய்தான்? இராவணன் சூர்ப்பநகைக்குத் தீங்கு செய்யக் காரணம் என்ன? அது எவ்வாறு அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் ஆயிற்று? பார்க்கலாம்.
    வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை அடைந்த சாதனை மனிதர்கள் சிலர் மிகுந்த உற்சாகமான மனநிலையை அடைவர். இதனை, உவகை மகிழ்ச்சி (குறள் - 531) என்று வள்ளுவர் கூறுகின்றார்.
    இத்தகைய மனநிலையை அடைந்தவர்கள் தங்கள் மனநிலையை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையேல் உள்ளத்தில் அகந்தை உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்பான எண்ணம் (ணாடணிதஞ்டணாடூஞுண்ண்ணஞுண்ண்) ஏற்படும். அதன் விளைவாக தவறுகள் பல புரிந்து வீழ்ச்சி அடைய நேரிடும்.
    இனியதொரு வாழ்வியல் உண்மையைக் கிரேக்கச் சிந்தனையாளர் எபிகூரியஸ் கூறுகின்றார். நம்நாட்டுச் சிந்தனையாளர் திருவள்ளுவரும் பொச்சாவாமை என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் இந்த உண்மையைத்தான் வலியுறுத்துகின்றார்.
    இராவணனுடைய வீழ்ச்சிக்கும் இம்மனநிலையே மூல காரணமாக அமைந்தது. இவ்வுண்மையை இராவணன் வீழ்ச்சிக்குப் பின்னர் வீடணன் மூலமாக வெளிப்படுத்துகின்றார் கம்பர்.
    இராவணன் மிகப்பெரிய சாதனைகள் புரிந்தவன்; கல்வி, கேள்வி, வீரம் ஆகிய மும்மைச் சிறப்புகளிலும் தன்னிகர் அற்றவனாக விளங்கியவன். இவ்வெற்றியின் காரணமாக அவனுடைய உள்ளத்தில் எழுந்த அகந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்பட வைத்தது.
    இம்மனநிலை காரணமாக திசைப் பயணத்தின்போது இராவணன், ஒரு தவறு செய்தான். அதுவே அவனுடைய வீழ்ச்சிக்கு அவனே இட்டுக் கொண்ட வித்தாக அமைந்தது.
    இராவணன் திசைப் பயணத்தின் போது பல போர்களைச் செய்தான். அப்போர்களில் குறிப்பிடத்தக்கது காலகேயர்களுடன் நிகழ்த்திய போர். ஏனெனில் அப்போரில் காலகேயருடன் இணைந்து தன்னை எதிர்த்துப் போர் செய்த தன்னுடைய மைத்துனனும், தன்னுடைய தங்கை சூர்ப்பநகையின் கணவனுமாகிய வித்துருசிங்கனையும் இராவணன் கொன்றான்.
    தன்னுடைய தங்கையாம் சலமிகுத்த
        சூர்ப்பநகை தன்னைக் கொண்ட
    மின் அனைய சுடர் இலைவேல்
        வித்துருசிங்கன் தனை வெங்களத்து வீழ்ந்தான்.
                        (இராமாயணம், உத்தரகாண்டம் 411)

    என்னும் பாடல் தொடர்களில் இராவணன் தன் மைத்துனனைக் கொன்ற செய்தி கூறப்படுவது காண்க.
    தன் கணவன் தன் அண்ணனாலேயே கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற சூர்ப்பநகை பெருந்துன்பம் உற்றாள்.
    "என் கணவனைக் கொன்று, நான் மங்கல அணியினை இழக்குமாறு செய்த என் தமையன், மூவுலகையும் புகழுடன் ஆள, அதைப் பார்த்துக் கொண்டு நான் வாழமாட்டேன்; என் தமையனைக் கொன்று விட்டு நானும் இறப்பேன்" என்று போர்க்களத்தில் இறந்து கிடந்த தன் கணவன் முன்னிலையில் உறுதிகொண்டாள்.
    ...... எனை நூல் இழப்பித்த இராவணனாம் என் தமையன்
    தன்னை மூவுலகு ஆள யான் கண்டு தார் அவுணர்
    மன்னே வாழ்வேனோ வாழ்வேனோ
   
    தாக்கியே காதனைத்தரைப்படுத்த தசமுகனார்
    நாக்கினையே நான் பிடுங்கி என்றன் நடலை நோய் அது தீரப்
    போக்குவேன் என் உயிர் என்று சூர்ப்பநகை புறப்பட்டாள்.
                    (இராமாயணம், உத்தரகாண்டம், 428, 432)

    என்னும் பாடல் அடிகள் சூர்ப்பநகை இராவணனைக் கொல்வேன் என்று உறுதி செய்ததைக் கூறுகின்றன.
    இராவணனைக் கொல்ல வேண்டும் என்பது சூர்ப்பநகையின் உறுதியான முடிவாயிற்று. எப்படிக் கொல்வது? அதற்காக அவள் செய்த சூழ்ச்சியே சீதையின் மீது இராவணனுக்குக் காதல் உண்டாகுமாறு செய்தது.
    இராமபிரான் மீது சூர்ப்பநகை காதல் கொண்டதாகவும், சீதை இராமனுடன் இருக்கும்வரை இராமன் தன்னை விரும்பமாட்டான் என்று கருதியதாகவும், சீதையை இராமனிடம் இருந்து பிரிப்பதற்காகவே இராவணன் உள்ளத்தில் சீதையின் மீது காதல் எழச்செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.

    உண்மைதான். ஆனால், சூர்ப்பநகையின் செயல்களைச் சிந்தித்துப் பார்த்தால், சூர்ப்பநகைக்கு இராமன் மீது காதல் கொள்வதைவிட, இராமனுக்கும், இராவணனுக்கும் இடையே பகைமை ஏற்படுத்த வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கின்றது.
    இராமன் மீது காதல் கொள்வதுதான் முதன்மையான நோக்கம் என்றால், அவள் நினைத்தவாறு சூழ்ச்சி செய்து இராமனிடம் இருந்து சீதையைப் பிரித்த பின்னர் இராமனைச் சந்திக்க முயன்றிருக்க வேண்டும்.
    இராவணன் தான் சாகும்வரை சீதையின் மீது கொண்ட காதலை விட முடியாமல் தவித்தது போல, சூர்ப்பநகையும் இராமனைத்தேடி அலைந்து தவித்திருக்க வேண்டும். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை.
    இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து அசோக வனத்தில் சிறை வைத்தபின் அவள் தன் நோக்கம் நிறைவேறியவளைப் போல அமைதி அடைகின்றாள். எனவே, இராமனுக்கும், இராவணனுக்கும் பகைமை உண்டாக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்திருக்கின்றது.

    இராமன் மீது காதல் கொள்ளுதல் அவளுடைய தலைமையான நோக்கம் அன்று என்பது தெளிவாகின்றது.
    இராவணனால் கொல்லப்பட்ட தன் அன்புக் கணவன் வித்துருசிங்கன் உடல் மீது விழுந்து புலம்பியபோது கூறிய உறுதிமொழியின் படி, இராவணனைக் கொல்வதற்குச் சீதையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றாள் என்றுதான் கருதத் தோன்றுகிறது.
    இராவணன் இறந்த பின்பு, புலம்புகின்ற வீடணன் கூற்றும் நம்மை இவ்வாறு நினைக்க வைக்கின்றது.
    கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது கேட்டுக்
    கொடுமை சூழ்ந்து
    பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்
    பழி தீர்ந்தாளே
                (கம்ப. 9926)

    என்பன வீடணன் கூற்றைச் சுமக்கும் வரிகள்.
    மைத்துனனை எவரும் கொல்லமாட்டார்கள். ஆனால் நீ கொன்றாய். அதைக் கேட்டுத்  தன் பல்லினால் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு, கொடிய பாவியாகிய சூர்ப்பநகை தன்னுடைய நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொண்டாளே என்பது இதன் பொருள்.
    சூர்ப்பநகை இராவணன் மீது கொண்ட பகை, நெடுநாள் இருந்த பகை; பெரும் சுமையாக இருந்த பகை. இராவணன் இறந்தவுடன் சூர்ப்பநகையின் உள்ளத்தில் இருந்த அந்த சுமை இறங்கிவிட்டது. வீடணன் கூற்றில் உள்ள நெடும்பாரப் பகை என்னும் தொடர் இதை உணர்த்துவதைக் காண்கின்றோம்.   
    ஒரு மனிதன் தான் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்திக்கும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடவும், தொடர்ச்சியாக வெற்றிகளைச் சந்திக்கும்போது அதிகக் கவனமாக மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு வாழ்வியல் உண்மை.
    இராவணனுடைய வீழ்ச்சியும், இராவணனுடைய வீழ்ச்சி பற்றிய வீடணனுடைய கூற்றும் நமக்கு இவ்வுண்மையை உணர்த்துகின்றன.

1 comment:

  1. தங்கள் வலைப்பதிவு தகவல்கள்
    அருமையாக உள்ளது.
    பாராட்டுக்கள்
    தோல்விகள் தொடர்ந்து நிகழும்போது
    மனதை திடபடுத்தி கொள்ளவேண்டும் என்பதுதான்
    என்னுடைய கருத்து.வெற்றிகள் தொடரும்போது
    அதை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்
    என்பது சரியே

    ReplyDelete