ஆலயதரிசனம் மே 2016 மாத இதழிலிருந்து................
தேர்தல் வந்துவிட்டது.
மே 16 - வாக்குப்பதிவு. மே 19 வாக்கு எண்ணிக்கை. அடுத்து 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்கள் (?!) யார் என்று தெரிந்து விடும் என்பதைத்தவிர, புதிய விஷயங்கள் எதுவும் மக்களுக்காக நடந்து விடப்போவதில்லை.
ஒரு திருவிழா போல ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் இத்தேர்தலில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது புதிய நம்பிக்கை என்று பல தேர்ந்த அரசியல் விமர்சகர்கள் சொல்லுகிறார்கள்.
அரசியல் என்பது தொண்டு என்கிற காலம் மலை ஏறிப்போய் தொழில் என்று ஆகிவிட்டது. தொண்டு என்பது எல்லோராலும் செய்ய முடிந்தது. தொழில் என்பது முதலீடு உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடிந்தது.
இன்று பல கோடி ரூபாய் செலவு செய்து தொண்டு செய்ய அரசியல்வாதிகள் துடிக்கும் துடிப்பு வியக்க வைக்கிறது.
தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. எந்தக் குற்றச்சாட்டையும் சிரித்துக் கொண்டே மறுக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் - மோசமானவர்கள் - சுரண்டல் பேர்வழிகள் - எங்களைத்தவிர என்று ஒவ்வொரு அரசியல் கட்சிக்காரர்களும் முழக்கமிடுகிறார்கள்.
பொதுமக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே - என்கிற பயமெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாகப் போய்விட்டது.
படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் என்று பதறினான் பாரதி. இன்று பல அரசியல்வாதிகள் அதிகம் படித்தவர்கள்.
மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது ஜனநாயகத்தின் சிறப்பு என்பது உண்மைதான்.
ஆனால்,
தாங்கள் விரும்பியவர்களையோ - இவர்கள் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களையோ தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் நிறுத்தும் வேட்பாளர்களில் யாரோ ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.
சுயேச்சையாகவும் நிற்கலாம் என்பது ஓர் ஒப்புக்கான ஏற்பாடுதான்.
ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் வென்றாலும் விலைபோய்
விடும் காட்சியையும் பார்க்கிறோம்.
ஜனநாயக ஆட்சியில் -
அரசாங்கத்துக்குக் கடனும், அரசாங்கத்தை நடத்துபவர்
களுக்கு நாளுக்கு நாள் சொத்து சேர்வதும் ஜனநாயகத்தின் மாட்சியா வீழ்ச்சியா?
(சென்ற தேர்தலைவிட இத்தேர்தலில் பல அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு பன்மடங்கு பெருகியிருக்கிறது. இது அவர்களே கொடுத்த கணக்கு).
ஒரு வேலை இல்லை. ஒரு தொழில் இல்லை. ஒரு முதலீடு இல்லை.
கட்சியின் சாதாரணப் பதவியில் உள்ள ஒருவர் வெள்ளையும் சள்ளையுமாக - 16 லட்சரூபாய் காரில் பறப்பதைப் பார்ப்பவர்களுக்கு - அரசியல் ஆசை வரத்தானே செய்யும்!
நம் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்.
"இன்று மக்கள் ஓரளவு நன்றாகத்தானே இருக்கின்றார்கள். பணப்புழக்கம் இருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. அப்ப
டியே இல்லாவிட்டாலும், 20 கிலோ அரிசி இலவசம். இப்படி அரசாங்கம் பார்த்துப் பார்த்து செய்கிறதே...."
அப்போது அவர் சொன்னார்.
தினசரி 100 ரூபாய் கிடைக்காதவர்கள் - ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதவர்கள் எத்தனை லட்சம் தெரியுமா? அமர்வதற்கு ஒரு வீடும், முகவரியும், ரேஷன் அட்டையும் இல்லாதவர்கள் எத்தனைபேர்
தெரி
உண்மைதான்.
தமிழ்நாட்டில் மட்டும் படித்த பலரும் (சுமார் 1 கோடி) வேலையில்லாமலிருக்கிறார்கள். சிலருக்கு வேலை என்று ஒன்று இருக்கிறதே தவிர, வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
எதிர்த்த வீட்டுப்பையன் பி.இ., படித்து விட்டு மாதம் 40,000 ரூபாய் சம்பாதித்து சௌகரியமாக இருக்கிறான் என்று, தன்னிடம் இருக்கும் தனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த முக்கால் ஏக்கரையும் விற்றுப் படிக்கவைத்து விவசாயி மாதம் 6,000 ரூபாய்க்கு அல்லாடும்
போது விற்ற நிலத்துக்கு வருந்துவதா வாங்கிய வட்டிக்கு வருந்துவதா என்று தெரியவில்லை. சுயதொழிலுக்கான வாய்ப்போ, திறமையோ, சிந்தனையோ ஊக்கமோ யாரிடமும் இல்லை. அப்படி ஒரு படிப்பு - சூழல்!
தொழில் செய்பவர்களே தொடர்ந்து தொழில் நடத்தத் தயங்கும் சூழல்!
கள யதார்த்தங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு குளிர்சாதனஅறையில் கம்பீரமாக அமர்ந்து கதையளக்கும் அரசியல்வாதிகள் வானத்தை வில்லாக வளைப்பதாக நாக்கூசாமல் சொல்லும்போது வேதனை கலந்த சிரிப்புதான் வெளிப்படுகிறது.
என்னென்ன செய்வேன் என்நு சொல்கிறார்களே தவிர எப்படிச் செய்வேன் என்று யாரும் சொல்வதில்லை.
அப்படிச் சொன்னால் இதுவரை ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா!
இதற்கெல்லாம் காரணம், ஆன்மிக வறட்சிதான். பாவ புண்ணியங்
களைப் பற்றிய புரிதல் இன்மைதான். ிஐயோ! இது பாபமல்லவா!ீ என்ற குற்ற உணர்வு இல்லாமைதான்!
நம் பாரததேசத்தில் - குறிப்பாக - நம் தமிழ்நாட்டில் அறம் சார்ந்த வாழ்க்கையே வாழ வலியுறுத்தி ஆன்றோர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.
தெய்வ பக்தி என்பது ஒழுக்கத்தோடு தொடர்புடையது. ஒழுக்கம் சார்ந்த வாழ்வுதான் அறவாழ்வு!
தர்மம் ஒருவனை வழி நடத்தும். காப்பாற்றும்.
இன்று தர்மம் அடிபட்டு அலங்கோலமாகக் கிடக்கிறது.
முளைக்காத விதைகள் போல - மனத் தூய்மையற்ற ஆடம்பர பக்திதான் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.
நன்மைகள் பலமடைந்தால் தவிர, தீவினைகள் அகல்வதற்கு வழியில்லை.
அப்படியானால், இன்றைய தேர்தல்களும் ஜனநாயகமும் பொருளற்றவைதானா என்று கேட்கலாம்.
பாரதிதாசன் அருமையான ஓர் பாடலை எழுதினார்.
வயது முதிர்ந்த மனைவி பற்றி ஓர் முதியவர் பாடுவது.
குழி விழுந்த கண்கள் -
நரைத்த தலை -
சுருக்கிய தோல் -
தளர்ந்த நடை -
இப்படி இருக்கும் என் மனைவி குறித்து எனக்குச் சந்தோஷம்
தான். என்ன சந்தோஷம் என்றால் உயிருடன் இருக்கிறாளே என்கிற சந்தோஷம்தான் என்பார்.
அதேதான் நம் தேர்தல் நடைமுறைகளிலும்! எத்தனை சிக்கல்கள் - இருப்பினும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற முடிகிறதே - அந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறதே!
நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து ஐந்தாண்டு நம்மை ஆளப்போகிறவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்!
அவர்கள் ஆள்வார்கள்.
நாம் ஆளப்படுவோம்!
ஆன்மிகம் இங்குதான் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இனி நம்மை பகவான்தான் காப்பாற்ற வேண்டும். வேறு யார் காப்பாற்ற முடியும்? அவனைச் சரணடைவோம்!
No comments:
Post a Comment