Saturday, January 1, 2011

குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் உவமைகள்

 -புலவர். ம.நா.சந்தானகிருஷ்ணன்

    உலகில் இலக்கியங்களைப் படைப்போர் உவமைகளைப் பொருத்திப்பாடி இலக்கிய இன்பத்தை மிகுவித்துள்ளனர். ஆழ்வார்களில் தனிச்சிறப்புப்பெற்றுள்ள குலசேகரஆழ்வார் தாம் அருளிச்செய்த பெருமாள்திருமொழித் திருப்பாசுரங்களில் தனித்தன்மை வாய்ந்த உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அப்பாசுரங்களைப் பாடினால் பக்தி வளரும். படித்தால் இலக்கிய இன்பம் கிடைக்கும்.
    திருவித்துவக்கோட்டுப் பெருமானைப் பாடியுள்ள திருமொழியில், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வோர் உவமையைக் கூறி விளக்கும் முறை நவில்தொறும் இன்பம் பயப்பதாய் அமைந்துள்ளது. ஆழ்வாருடைய நோக்கம் திருமாலின் திருவடிகளை அடைக்கலமாக அடைதலேயாகும்.
    பறக்கும் இயல்பினைப் பெற்றுள்ளமையால் பறவைகள் அப்பெயரைப் பெற்றுள்ளன. பறவைகள் பறப்பதும், பின்னர் மரங்கள் போன்ற இடங்களில் அமர்வதும் இயல்பு. எங்கும் அமராமல் எப்பொழுதுமே பறந்து கொண்டு இருத்தலும் இயலாது. பறக்காமல் எல்லா நேரமும் அமர்ந்து கொண்டிருந்தலும் இயல்பு அன்று. வீட்டின் உச்சிப்பகுதி, மரத்தின் கிளைகள், கோபுரங்கள், பிறகட்டடங்கள் முதலியவற்றின் மீது பறவைகள் அமரும். விரும்பும் பொழுது பறப்பதும், மறுபடி எங்காவது அமர்வதும் அவற்றிற்கு இயல்பு. பூமியின் மீது இது நிகழ்கின்றது. ஆனால், கடல்பரப்பின் மீது இது இயல்பன்று. பரந்துபட்டது கடல். அதனால் அதற்குப் பரவை என்ற பெயரும் உண்டு.

    கரையை ஒட்டி கடலில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் உச்சி மீது பறவை ஒன்று அமர்ந்து கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியது. கப்பல் சென்று கொண்டிருந்தபொழுது, பறவையும் பறக்காமலே சென்று கொண்டிருந்தது. தன் முயற்சியில்லாமல் பயணித்தல் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவது இயல்பே. கடலில் கப்பல்மிக நீண்ட தூரம் சென்று விட்டது. அப்பொழுது அந்தப்பறவை பறக்கத் தொடங்கியது. பறந்து பறந்து பார்த்தது. அமர்வதற்கு எங்கும் இடமில்லை. பறக்குமிடம் கடல் ஆதலால், அந்தப்பறவை அமர்வதற்கு மரங்களோ கட்டடங்களோ வேறெதுவுமோ இல்லை. அமர்வதற்கு  இடமில்லாமல் பறந்து திரிந்து, கப்பலைச் சுற்றிச் சுற்றி வந்து, அந்தக் கப்பலின் பாய்மரத்தின் உச்சியிலேயே மீண்டும் அமர்ந்தது. பறவைகளில் சிறிய உடலினைப் பெற்றுள்ள பறவைகளும், பெரிய உடலினைப் பெற்றுள்ள பறவைகளும் உண்டல்லவா? ஆழ்வார் "மாப்பறவை" என்று குறிப்பிடுவதால் அந்தப் பறவை உடலால் பெரியது என்பதும் புலனாகின்றது. பெரிய உடலைக் கொண்ட பறவை நீண்ட நேரம் பறத்தலும் அரிது.
    தாம் இருந்த சமயத்தை விட்டுவிட்டுப் பிற சமயங்களுக்குச் சென்று, மீண்டும் முன்பிருந்த சமயத்திற்கே வருவோரைக் காண்கின்றோம் அல்லவா? தாம் இருந்த இயக்கத்தை விடுத்து, வேறு இயக்கங்களுக்குச் சென்று மீண்டும் பழைய இயக்கத்திற்கே வந்து சேர்வோரையும் பார்க்கிறோமல்லவா? (அப்பர் என்று போற்றப்பெறும் திருநாவுக்கரசர் பெருமான் பிறசமயம் புகுந்து சிலகாலம் இருந்து மீண்டும் தம் சமயத்திற்கே வந்தார் என்பதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம்).திருமழிசையாழ்வாரும் பல சமயங்களில் இருந்து வைணவ நெறியில் நிறைவாக நின்றவர்.
    திருமாலின் திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்து, பிற சமயத்தில் அல்லது பிற தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, மீண்டும் திருமாலின் திருவடியை அடைக்கலமாக வேண்டித் திரும்பியோர் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிலையில் உள்ளவர்களைப் பற்றி ஆழ்வார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
    "எங்குச் சென்றாலும் எனக்கு உய்வு என்பது இல்லை. எனக்கு உய்வு பெறும் இடம் உன் திருவடிகளே" என்று திருமாலிடம் கூறுகின்றார்.
    "கோபத்தை வெளிப்படுத்தும் கண்களையும் வலிமையான உடலையும் பெற்றிருந்ததும், கம்சனால் ஏவப்பட்டதுமான குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனே! உன் திருவடிகளே எனக்கு அடைக்கலம். வேறு எங்குச் சென்றாலும் எனக்கு உய்வு இல்லை என்பதை உணர்ந்தேன். அலைகடல் நடுவே சென்று கொண்டிருக்கும் கப்பலின் உச்சியில் அமர்ந்துள்ள பெரிய பறவையானது அனைத்துத் திசைகளிலும் பறந்து திரிந்து கரைகாண இயலாமல் திரும்பி வந்து மரக்கலத்தின் உச்சியில் அமர்வதைப் போல உம் திருவடிகளையே அடைக்கலமாக அடைகின்றேன். எனக்கு வேறு புகலிடம்இல்லை" என்று வித்துவக்கோட்டுப் பெருமாளிடம் அடைக்கலம் கோருகிறார் குலசேகர ஆழ்வார்.
    "வெங்கண்திண் களிறுஅடர்த்தாய் வித்துவக்கோட் டம்மானே!
    எங்குப்போய் உய்கேன்உன் இணையடியே அடையலல்லால்
    எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே"
    என்பதே குலசேகர ஆழ்வார் அருளிய அப்பாசுரம்.

    குலசேகர ஆழ்வார் உலகியலில் ஈடுபட்டு அலைபாயும் மனம் கொண்ட தனக்குப் பறவையையும், தன்னைக் காத்து, தனக்குப்புகலிடம் தந்த திருமாலின் திருவடிகளுக்குக் கப்பலின் பாய்மர உச்சியையும் உவமையாக்கிக் கூறும் நயம் இலக்கிய இன்பம் நல்குகின்றது. தீய சக்திகளை அழிக்கும் திருமாலின் ஆற்றலை "வெங்கண் திண்களிறு அடர்த்தாய்" என்ற பகுதியால் சுட்டுகின்றார்.
    அலைபாயும் மனத்தை அடக்கி, எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளையே அடைக்கலமாகக் கொண்டு வழிபட்டு திருமாலின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோமாக!

No comments:

Post a Comment