Saturday, January 1, 2011

எள் - ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

ஆகார நியமத்தில் எள் சேர்க்கக்கூடாது என்பது சம்பிரதாயமாக இருக்கிறது. அதில் "எள்" உணவைப் பற்றி தனது கருத்துக்களை இங்கே தெரிவிக்கிறார் ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுப்பு தெரிவிக்கலாம் காரண காரியங்களோடு!

    வைணவர்கள் அனுஷ்டானமும் ஆகார நியதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்திலேயே கடுமையாக இருந்தால் பலரும் பயப்படுவார்கள். படிப்படியாக வலியுறுத்த  வேண்டும். குறிப்பாக எள் பற்றி அடியேன் கருத்து இது.

    மனிதனுக்கு தேவையானது எள். நல்ல எண்ணெய் என்று பெயர் எப்படி வந்தது? மற்ற எண்ணெய்களுக்கு எல்லாம் தலைப்பெயர் உண்டு. ஆமணக்கு: ஆமணக்கு எண்ணெய். தேங்காய்: தேங்காய் எண்ணெய். மணிலா: மணிலா எண்ணெய். இப்படி எல்லாம் தலைப்பு பெயர் உண்டு. ஆனால் நல்லெண்ணைக்கு கிடையாது. இதற்கு ஒரு செவிவழிச் செய்தி உண்டு.
    பாற்கடல் கடையும்போது மகாலட்சுமி வெளிப்பட்டார். அப்போது பகவான் ஒரு திருவிளையாடல் நடத்த உத்தேசித்து எள் செடி விதைத்திருந்த தோட்டத்தில் தம்மை மறைத்துக் கொண்டார்.
    லட்சுமி அந்தச் செடிகளை மிதித்துக் கொண்டு சென்று பெருமாளைத் தேடினார். அவள் எள்ளை மிதித்தபோது எண்ணெய் வெளிப்பட்டது. மகாலட்சுமி மிதித்ததால் நல்ல எண்ணெய் ஆனது. அந்த எண்ணெயுடன் கலந்த லட்சுமி அப்படியே ஓடிச் சென்று பெருமாளுடன் கலந்து விட்டாள். இதனால் லட்சுமி நல்லெண்ணெய்யில் குடி இருப்பதாக ஐதீகம். இதுவே தீபாவளி ஸ்நானம் செய்வதற்கு நல்லெண்ணெய் ஸ்நானம் மிகவும் முக்கியம்.
                                (தினமலரில் 5.11.2010  வெள்ளி இதழில் தொகுப்பு)


    எள்ளு இது கண்ணுக்கு ஒளியும் உடலுக்கு வெண்மையும் தரும். இரத்தப் பெருக்கை உண்டாக்கும்.
    திருமலையில் கொலு பஞ்சாங்கச் சிரவணம் நடக்கும். தோமாலை சேவைக்குப் பிறகு கொலு பேர மூர்த்தியை கருட மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பஞ்சாங்கம் படிப்பர். பின்பு வெள்ளிக்கிண்ணத்தில் எள்ளுப்பொடியையும், சர்க்கரையையும் கலந்த பிரசாதம் நிவேதனமாகும். எள்ளுப்பொடி பிரசாதம் புத்திர சந்தானத்தை அளிக்க வல்லதாம்.
    திருமலை வெங்கடாஜலபதிக்கே ஸ்ரீ ராமாநுஜர் எள்ளும் சர்க்கரையும் கலந்து பெருமாளுக்கு எள்ளுப்பொடி பிரசாதம் நிவேதனம் செய்யும் பொழுது நாம் ஏன் உபயோகிக்கக் கூடாது?

வம்மின் புலவீர்!

- தமிழ்மாமணி. பாவலர் சித்தன், புதுச்சேரி

    ஆழ்வார்களில் முதன்மையானவர் சுவாமி நம்மாழ்வார்! ஆழ்வாரை வேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை நாதன் என்றார் மணவாளமாமுனிகள். மேலும் ஆழ்வார் என்றாலே சிறப்பாக நம்மாழ்வாரையே குறிக்கும். நம் - ஆழ்வார் என்று இவரை நாம் அனைவருமே உரிமை கொண்டாடுகிறோம்.
    "நம்பெருமாள், நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை" ஆகிய நால்வருக்குமே "நம்" என்ற சிறப்புண்டு.
        "உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் ? உண்டோ திருவாய்
            மொழிக் கொப்பு?" என்பது உபதேசரத்தினமாலை


    நான் பாவேந்தர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்று கொண்டிருந்த போது ஒரு நாள் அவர் திருவாய்மொழியைப் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். இவர் நாத்திகராயிற்றே! இதைப் படிக்கின்றாரே - என்று வியந்து, "ஐயா! நீங்கள் ஏன் இதைப்படிக்கின்றீர்கள்?" என்றேன். அதற்கவர், "இதை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். இது வளமான தமிழ் ; தமிழ் அழகுகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன" - என்றார்.
    கவிஞர் என்னைப் பார்த்து "முதற் பதிகத்தில் ஒரு பாடலைச்சொல்"என்றார்,நான்.
        "மனனக மலமற மலர்மிசை எழுதரும்"
என்று தொடங்கும் பாசுரத்தைச்சொன்னேன்.
    இந்தப் பாட்டின் சிறப்பென்ன? என்றார். "எனக்குத் தெரியாதுங்க" - என்றேன்.
    "பொருள், சந்தம் முதலியவைகளை அறிந்து படிக்க வேண்டும்" என்றார். இந்தப் பதிகத்தில் நெட்டெழுத்தே வராமல் பாடியுள்ளார் பார்! பாட்டின் முடிவில் "ஏசு ஈற்றெழுத்து" அது பிரிநிலை ஏகாரம் என்றார்.
    "ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் தான் நாம் சந்தங்களை - வண்ணங்களைக் காணலாம். இது சந்தப் பாடல்!" என்றார்.

    ஒருநாள், புலவர் சிலர் ஆழ்வாரைக் காண வந்தனர். அவர்களை ்வம்மின் புலவீர்சு என்றழைத்தார் ஆழ்வார்.
    "நாங்கள் ஒரு வள்ளலைப் பாடிப் பொருள் பெறச் செல்கிறோம்" என்றனர் புலவர்கள்.
    "தன் செல்வத்தை வளனாக மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்ன பயன்" ?
    புலவீர்! மிக நல்ல வான்கவி கொண்டு நிலையற்ற மனிதரைப் பாடி அவரிடம் பெறும் பொருள் உமக்கு எத்தனை நாளைக்குப் போதும்?
    "செல்வம் ஒரு குப்பை; அதைப் பெறுவதற்காக உம் வாய்மையை இழக்கின்றீரே!" - என்றார் ஆழ்வார்.
    புலவர்கள் - "சுவாமி ; படித்துள்ள நாங்கள் யாரையாவது பாடவேண்டுமே" என்றனர். அவர்கட்கு ஆழ்வார் - "உலகில் வள்ளல் ஒருவனே; அவன் என் வள்ளல் மணிவண்ணன். அவனைப் பாட வாருங்கள் : இவ்வுலகில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம்" - என்றார்.
    புலவர்கள்! "சுவாமி; எங்கள் வாழ்வு நடைபெற வேண்டுமே" என்றனர். அதற்கு விடையாக ஆழ்வார், நீங்கள் உங்கள் உடலை வருத்தி உழைத்துப் பொருள் தேடி வாழ முயலுங்கள்.
        "நும் மெய் வருத்திக் கைசெய்து உய்மின்"
    அதுவே நல்வாழ்வு,அதைவிட்டு,
       "மாரியனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள்"
    என்று அவனிடம் இல்லாததைக் கூறி.
        "பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசி"
    உழல்கின்றீர்! - என்றார்.

        போலிப் புரவலனுக்கு ஆழ்வார் தந்த பெயர் பற்றை. (பற்றை = அற்ப வஸ்து; முளைத்தெழுந்து தீய்ந்துபோம் சிறு தூறு (தூறு = சிறு செடி).
    போலிப் புரவலனை ஆழ்வார் மனிதனாகவே மதிக்கவில்லை. ்புலவர்களே! நான் மானிடம் பாடவந்த கவி அல்லேன். நீங்களும் என்வழிக்கு வாருங்கள்சு - என்று கூறாமல் கூறுகிறார்.
    பாவேந்தர் சொன்னார் :-
    பாரதியாருக்கு மிகவும் பிடித்த பதிகம் இது. நம்மாழ்வாரைச்
    "சுயமரியாதையுடன் புலவர் வாழ வழிசொன்ன வள்ளல்" என்று புகழ்ந்துள்ளார் - என்று.
இக்கட்டுரை : - திருவாய் மொழி : சொன்னால் விரோதமிது (3-9-1)
        என்ற பதிகம் கூறும் செய்திகளின் சுருக்கம்.
   

உத்தரமேரூர்


 - ஸ்ரீ கூர்மநாதகவிதாஸர், பெருமாள்கோயில்

    உத்தரமேரூர் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி நகரங்களிலிருந்து ஒரு மணி நேர சாலைப்பயணத்தில் அடையக்கூடிய அழகிய, பழமையான, சரித்திரச் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பெற்ற அபிமான ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இன்று ஓரளவு வசதிகள் இருக்கும் சிறிய நகரமாகவும் நீர்வளம் மிகுந்த விவசாய மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது.
    நகரத்தின் மையப்பகுதியில் ஸ்ரீ வைகுந்தப்பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஈடுபட்டுள்ள எந்த ஆராய்ச்சியாளரும் உத்தரமேரூர் கல்வெட்டுக்களை அறியாமலிருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளை உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் விளக்குகின்றன. தொல்பொருள் இலாக்காவினரின் பொறுப்பில்  இக்கோயில் உள்ளது.
    திருத்தலத்தின் புகழ்பெற்ற தலைமைத் தெய்வமான ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் ஆனந்தவல்லித்தாயாருடனும் ஸ்ரீ தேவி பூதேவியுடனும் எழுந்தருளியிருக்கிறார். அஷ்டாங்க விமானமுடைய மிகச்சில திருக்கோயில்களுள் இவருடைய திருக்கோயிலும் ஒன்றாகும். (பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயில்) திருக்கோட்டியூர், மதுரை கூடலழகர் கோயில்கள் ஆகியவையும் அஷ்டாங்க விமானங்களுடையவையாகும்). இக்கோயில் நவநாராயண திருக்கோயிலாகும்.
    கீழ்தளத்தில் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள், அச்சுத வரதராஜப்பெருமாள், அநிருத்த வரதராஜப்பெருமாள், கல்யாண வரதராஜப்பெருமாள் சந்நிதிகள் உள்ளன.
    முதல் தளத்தில் வைகுண்ட வரதராஜப்பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணன், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகர் எழுந்தருளியிருக்கின்றனர்.
    இரண்டாம் தளத்தில் அனந்த பத்மநாபப் பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்.
    "வரத வரதீ  என்னும் திருநாமம் கேட்டுக் கொண்டேயிருப்பதால் திருஅத்தியூர் எனும் காஞ்சிபுரியையும் ஸ்ரீ கிருஷ்ணனால் மதுராபுரியையும் யோகநரசிம்மரால் சோழஸிம்ஹபுரமாகிய திருக்கடிகை (சோளிங்கர்) தலத்தையும், லக்ஷ்மி வராஹரால் திருவிடந்தையையும், அனந்த பத்மநாபனால் திருவனந்தபுரத்தையும் இக்கோயில் நினைவூட்டுகிறது. இவ்வகையில் அஷ்டாங்க விமானமுடைய பஞ்சகே்ஷத்ர அபிமானஸ்தலம் என்று இவ்வாலயம் கொண்டாடப்பெறுகிறது.

    ஆழ்வார்கள், ஆண்டாள், பூர்வாசார்யர்கள் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்கள். இராமாநுஜரின் வழிவந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு வேத, வேதாந்த, உபநிஷத, ஸ்ம்ருதி ஞானங்கள் இல்லாவிடினும் பரவாயில்லை. திருவாய்மொழியிலும் ஸ்ரீ மத் ராமாயணத்திலும் ஈடுபாடும் பக்தியும் இருந்தால் போதுமானது.
    விஜயநகர சங்கமகுல மன்னரான மல்லிகார்ஜூனன் காலத்தில் அவனுடைய குலத்தவர் தாதாசார்யர்களை ராஜகுருவாக ஏற்றுக்கொண்டனர். "ஐயாவய்யங்கார்" எனும் தாதாசார்யர் இரண்டாம் ஸ்ரீரங்கனுடைய காலத்தில் தொண்டை மண்டல திருத்தலங்களில் ஏராளமான கைங்கர்யங்களைச் செய்வித்தார். இம்மிடி குமார திருமலை தாதாசார்யர் தென்னேரியில் மிகப்பெரிய ஏரியை வெட்டுவித்தார். தாதசமுத்திரம் (ஐயங்கார்குளம்) எனும் ஏரியைக் காஞ்சிபுரத்தின அருகில் வெட்டுவித்தார். இவையெல்லாம் இன்றைக்கு ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்குமுன் நடந்தன எனலாம் (கலி 4683/ அஈ. 1582). இவருடைய வம்சத்தில் வந்தவர்தாம் கோடிகன்யாதானம் தாதாசார்யர். இவர் விஜயநகர மூன்றாம் வேங்கடவனின் ராஜகுருவாக விளங்கினார் (கலி 4731 - 4743 /அஈ 1630 - 1642). திருமலை, திருஅத்தியூர், திருமாலிருஞ்சோலை திருக்கோயில் விமானங்களுக்குத் தங்கம் வேய்ந்தார். இவர் முன்னோர்களின் வழியில் தொண்டைமண்டலத்தின் நீர்ப்பாசன ஏரிகளைச் சீர்ப்படுத்தினார். தொண்டனூரில் ஏரியை வெட்டுவித்த ஸ்ரீ ராமானுஜரே இவ்விஷயத்தில் தாதாசார்யர்களுக்கு முன்னோடியாவார். நம் முன்னோர்கள் ஆலயங்களை ஆன்மிக மையங்களாக மட்டுமல்லாமல் சமுதாய நல மையங்களாவும் நிர்வகித்து வந்தார்கள். வீரநாராயணபுரம் ஏரி எனும் வீராணம் ஏரி ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு முக்கியமான தீர்த்தமாகும்.
    வீரநாராயணபுரம் ஏரியின் எழுபத்துநான்கு மதகுகளை ஸ்ரீ ராமாநுஜர் நியமித்த எழுபத்து நான்கு ஆசார்யர்களாகவே பெரியோர்கள் உருவகம் செய்வார்கள். மதுராந்தகம், வீராணம் ஏரிகளைப் போலவே உத்தரமேரூர் ஏரியும் மிகப்பெரியதும் புகழ்பெற்றதுமாகும்.
    இக்கோயில் பிரார்த்தனை ஸ்தலமாகும். ஸ்ரீ கல்யாண வரதரிடம் கல்யாண பிரார்த்தனைகளும், ஸ்ரீ அச்சுத வரதரிடம் உடல்நலம் காக்கும் பிரார்த்தனைகளும் ஸ்ரீ லக்ஷ்மி வராஹரிடம் வழக்குகளில் வெற்றிபெற வேண்டும் பிரார்த்தனைகளும் செய்து கொள்ளப்படுகின்றன.
    அண்மையில் மிகவும் முயன்று அன்பர்கள் கட்டியிருக்கும் இக்கோயிலின் இராஜகோபுரம் நீண்டு உயர்ந்து மங்களகிரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலின் இராஜகோபுரத்தை நினைவில் கொண்டு வருகிறது. இரட்டைத்தளி ஈஸ்வரர் கோயில் எனும் சிவாலயமும் இவ்வூரில் இருக்கும் பழமையான ஆலயமாகும்.
    திருக்குடந்தை, காஞ்சிபுரம் போலவே உத்தரமேரூரிலும் ஸ்ரீ தாததேசிகன் (தாதாசாரியர்) ஸ்வாமிக்கு விக்கிரகப் பிரதிஷ்டையும் வைபவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாதாசார்யர் பாடிய ஸ்ரீ ஹனுமத் ஸ்தவம் எனும் ஸ்தோத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இவர் எழுப்பிய சஞ்சீவிராயர் கோயில் ஐயங்கார் குளம் ஊரில் இன்றும்  உள்ளது. தாதாசார்யர் ஆஞ்சநேயரை மானஸ ஸாக்ஷாத்காரத்தில் சேவித்து இந்த ஸ்தவத்தைப் பாடினார். சஞ்சீவிராயரை சேவித்து விட்டும் உத்தரமேரூர் வந்து இத்திருக்கோயிலில் நவநாராயணர்களைச் சேவிக்கலாம்.

உங்கள் உடல் நலம் , பஞ்ச சமஸ்காரம்

                                                          உணவே மருந்து

    நோய்கள் வருவதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு.
    ஒன்று சுகாதாரமின்றி வாழ்தல்.
    இரண்டு உணவுப்பழக்க வழக்கங்கள்.
    வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைகளோடு பராமரிப்பது என்பது வெறும் ஏட்டளவில் நின்று விட்ட காலமாகிவிட்டது.
    நல்ல தண்ணீரைப் பருகவும், நல்ல தூய்மையான காற்றைச் சுவாசிக்கவும் ஏராளமாகப் பணம் செலவழிக்கும் காலம் விரைவில் வரப்போவதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்.
    அதிகம் படிக்காத மக்கள் கூட சுகாதார நிலையில் வாழ்கிறார்கள். ஏராளமாகப் படித்துத் தாராளமாகச் சம்பாதிக்கும் நம்மால் நகர்களில் சுகாதாரமான சூழலில் வாழ முடியவில்லை.
    சுற்றிலும் சேறு - குப்பைகள், கழிவு நீர், அங்கேதான் இடம் கிடைத்தது. சதுர அடி 1500 ரூபாய் போட்டு கட்டிடம் கட்டினார். உள்ளே தேவலோகம்போல் இருக்கிறது. வாசலை விட்டு இறங்கினால் ஒரே அழுக்கு.
  "நோய் நாடி நோய் முதல் நாடி" என்றார் வள்ளுவர்.
    செரிக்காத, உடலுக்குப் பொருத்தமில்லாத உணவுகள், சுற்றுச் சூழல் சீர் கேடான வாழ்க்கை.....
    இவற்றிலிருந்து விடுபட சிந்திக்காத வரை எப்படி உடல் நலம் பேண முடியும்?

பஞ்ச சமஸ்காரம் (நித்யானுஷ்டானம் செய்யும்போது.......)

    இப்போது தட்டிலில் உண்ணும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் பெரியோர்கள் உண்பதற்கு இலைகளை பயன்படுத்தச் சொன்னார்கள். இலையில் பல மருத்துவக் குணங்களும் உண்டு.
    உணவு பரிமாறுவதற்கு வாழையிலை, பலா இலை, மா இலை, புரசை இலை, புன்னை இலை, மந்தாரை இலை - ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள்.
    இலையைப் போடுவதற்கும் ஒரு முறை உண்டு.
    இடத்தை நன்கு சுத்தி செய்ய வேண்டும். அழுக்கான இடத்திலோ குப்பையைச் சேர்த்து வைத்து அதன் மீதோ இலையைப் போடக்கூடாது. அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. இறைவனுக்கு நிவேதனம் (கண்டருளச் செய்தல்) செய்ததையே சாப்பிட வேண்டும். தனித்துச் சாப்பிடக் கூடாது.
    "நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிடர் உடுக்கும் கூறையும் உண்ணும் சோறும் பாவம் செய்தன" என்கிறார் பெரியாழ்வார்.
    வாழையிலையைப் போடும் போது அதன் அடி வலப்புறம் பொருந்தும்படி போட வேண்டும்.
    இலையில் பிரசாதம் படைக்கும் பொழுது, முதலில் பருப்பு, காய்கறி பின்பு பிரசாதம் நெய் படைக்க வேண்டும்.
                        - தொடரும்.

திருவல்லிக்கேணி - அட்டைப்படக்கட்டுரை    ஓலைகட்டி தூது நடந்த எம்பெருமான், தன் பக்தனுக்கு சாரதியாய் இருந்து "அப்படி ஓட்டு இப்படி ஓட்டு" என்று சொல்லும் நிலைக்கும் ஆட்படுத்திக்கொண்டான் என்றால் அவன் எளிமைக்கு எல்லை நிலம் ஏது?
    பார்த்தனுக்குத் தேரோட்டியாய் - பார்த்தசாரதியாய் முறுக்கிய மீசையும், முகம் முழுக்க போரில் தன் பக்தனுக்காக ஏற்ற தழும்புகளுமாக, கருணைக் கடவுளாகக் காட்சி தரும் திருத்தலம் திருவல்லிக்கேணி.
    வங்கக் கடலோரம், வான்தொடும் கோபுரம் காட்சிதர இதோ அவன் திருக்கோயில் முன்னே இரு கரம் கூப்பி நிற்கின்றோம்.
    இத்தலத்தலத்தின் பெருமாளை நோக்கிப் பிள்ளைப் பெருமாளையங்கார் கூறுகிறார். "நீ உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்பார்த்தவர்களையும் அவர்களது குற்றங்களை மறந்து மன்னித்து உன்பால் சேர்த்துக்கொள்ளும் நீர்மைக்குணம் பெற்றுள்ளாய். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். உன்னிடம் சரணடைந்தவர்களைக் கைவிட்டதில்லை. உன் கருணைக்கும் அளவே இல்லை. அப்பேர்ப்பட்ட நீ நேர்மையில்லா கொடிய உள்ளம் பெற்ற அடியேனின் தீச்செயல்களையும் பொறுத்தருளி என்மீதும் இரக்கம் காட்டு" என்கிறார்.
    திருமங்கையாழ்வார் பதிகம் முழுவதிலும் திருவல்லிக்கேணி கண்டேன் என்று வாயாரப்பாடி பரவுகிறார்.
    வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை
        விழுமிய முனிவர்கள் விழுங்கும்
    கோதிலின் கனியை, நந்தனார் களிற்றைக்
        குவலயத்தோர் தொழுது ஏத்தும்
    ஆதியை அமுதை என்னை ஆளுடை
        அப்பனை ஒப்பவரில்லா
    மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
        திருவல்லிக்கேணி கண்டேனே!

    இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய மகாத்மியம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளசி. (பிருந்தம் என்றால் திரள் என்றொரு பொருளும் உண்டு). ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசிவனம் என்று பொருள் கொள்ளப்படும்.
    சுமதி என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குப் பெருமாளைத் தேரோட்டியாக காண ஆசை. அதற்காகத் தவம் செய்தான். அவன் தவம் செய்த இடம் திருமலை.
    வரம் கொடுக்கும் வள்ளலல்லவா.....
    ஸ்ரீநிவாஸன் அசரீரியாய் குரல் கொடுத்தார்.
    "நீ விரும்பிய தோற்றத்துடன் என்னைக் காண திருவல்லிக்கேணிக்கு வா" என்றார்.
    சுமதியும் இங்கு வந்து பார்த்தசாரதியை தரிசனம் செய்தான் என்பது வரலாறு. எப்படி தரிசனம் செய்தான் என்பதற்கு பின்வரும் கதை.
    வேதவியாசருக்கு ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி இத்தலத்திற்கு தவம் செய்ய வந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரமொன்றையும் கொண்டு வந்தார்.
    அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாகவும் மறுகை தன் திருவடியில் சரணம் அடைய அருள் புரிவதாகவும் இருந்தது.
    பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற முனிவரைக் கண்டு (சுமதி மன்னர் வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற, இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர். வலப்புறம் ருக்மிணியையும் இடப்புறம் சாத்யகியையும் வழிபட்டு அவ்விருவரும் மோட்ச உலகு பெற்றனர்.
    இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட சுமதி மன்னனும் அவ்விதமே வழிபட்டான்.
    வேங்கடவனால் காட்டப்பட்டதால், பெருமாளுக்கு "வேங்கடகிருஷ்ணன்" என்னும் திருநாமம் உண்டாயிற்று.
    திருக்கோயில் விமானம் விசேஷமானது.
    ஆனந்தவிமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தெய்வீக விமானம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
    தீர்த்தம் : அல்லிக்கேணி
    இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம். கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை. பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே பயன்படுகிறது.
இத்தலத்தில் இறைவனைக் காட்சி கண்டவர்கள்:-
    சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர், அத்திரி மகரிஷி, ஜாஜலி மகரிஷி, அநிருத்தன், மார்க்கண்டேயர், அர்ஜூனன்.
    அழகிய அல்லி மலர்கள் நிறைந்த குளத்தை சூழ்ந்ததாக அமைந்ததால் திருவல்லிக்கேணி என்ற பெயருண்டாயிற்றென்பர்.
    திருமயிலை எனப்படும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் ஒரு காலத்தில் ஒரே ஊராகக் குறிக்கப்பட்டன. மயிலைத் திருவல்லிக்கேணி என்று இரண்டு தலத்தையும் இணைத்தே திருமங்கையின் பாசுரம் இருக்கிறது.
    108 திவ்ய தேசங்களிலே தான் வளர்ந்த குல வழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்று தான். மூலவருக்கு இரண்டே திருக்கரங்கள். வலது கரத்தில் சங்கம். இடது கரத்தில் கோல்.

    வெறும் சாட்டையை வைத்துக்கொண்டல்லவா பாரதப்போர் முடித்தான். பற்றலர் வீய கையில் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை என்பது ஆழ்வார் வாக்கு.
    இங்கு ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர்.
    அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.
    மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமன் இத்தலத்தில் எழுந்தருளினார். சீதை, இலக்குவன், பரத சத்ருக்கணருடன் தொடர்ந்தனர்.
    சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர் கோலத்தில்இங்கு காட்சி தருகிறார்.
    சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கிசைந்து வேங்கடகிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.
    முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழைிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.
    மன்னுதண் பொழிலும் வாவிவும் மதிளும்
    மாட மாளிகையும் மண்டபமும்
    தென்னன் தொண்டையர்கோன் செய்த
    நன் மயிலைத் திருவல்லிக்கேணி

    என்கிற பாடலால் இக்கோயிலி்ன் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டதென்பது விளங்கும்.
    "தெள்ளிய சிங்கமாகியத் தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனென்பதும்" "பார்த்தன் தன் தேர்முன் நின்றானை" இத்தலத்துக் கண்டேனென்றும், திருமங்கையில் பாசுர வரிகளாகும்.
    திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப் பிரிந்தாள். இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு மகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் நின்றாள். முனிவர் பார்த்தார். அவருக்குப் புரிந்தது. வேதங்களில் கூறப்பட்ட தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். தக்க பருவம் வந்ததும் ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை ஏற்றுக்கொண்டார்.
    எனவே திருமணக் கோலத்தில் ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார்.
    இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது இந்த ஒரு திவ்ய தேசத்தின் மிகப்பெரிய சிறப்பு.
    வைணவத்தலங்களில் முக்கிய மூன்று தலங்களான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற முத்தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு சிறப்பு.
    இத்தலத்தை இரண்டாவது திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியைப் போல் இங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    கண்ணன் அர்ஜூனனுக்குத் தேரோட்டியாக இருந்து பீஷ்மர் விட்ட அம்புகளை அர்ஜூனனுக்காக ஏற்றுக்கொண்டதை காண்பிக்க இன்றைக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம்.

திருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு, வைணவச்சிம்மம், ஸ்ரீ கிருஷ்ணன் தூது

திருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு

    ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எங்கு பாடினார்  எந்த சந்தர்ப்பத்தில் பாடினார் என்பது பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இங்கு காண்போம். மதுரையை வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்த காலம். அவனுக்கு பரம்பொருள் யார் (எங்கும் பரந்து எதிலும் நிறைந்து என்றும் நிலைத்திருப்பது யார்) என்ற ஐயம் இருந்தது. எனவே பரம்பொருள் யார்? என்பதை நிர்ணயம் செய்யும் பொருட்டு பண்டிதர்களின் கூட்டத்தைக்கூட்டி விவாதிக்கச் செய்தான் மன்னன். யார் சரியாக நிர்ணயம் செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசாக பொற்கிழி (தங்கக்காசுகள் கொண்ட முடிப்பு) வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தான். அக்கூட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் கலந்து கொண்டு வேத, சாஸ்த்ர, இதிகாச புராணங்களை மேற்கோள் காட்டி திருமாலே பரம்பொருள் என்பதை நிர்ணயித்த சமயத்தில் ஒரு கழியில் கட்டியிருந்த பொற்கிழி தானாகவே பெரியாழ்வாரின் கரங்களில் வந்து சேர்ந்தது. மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. மன்னன் பெரியாழ்வாரை பெருமைப்படுத்த யானையின் மேல் ஏற்றி மதுரை மாநகரில் வலம் வந்தபோது திருமால் கருடன்மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அங்கிருந்த அனைவருக்கும் காட்சி கொடுத்து நானே மெய்! (பரம்பொருள்) என்று காண்பித்தார். எல்லாருக்கும் காட்சி தந்த பகவானுக்கு கண் திருஷ்டிபடக்கூடாது என்று எண்ணி யானையின் மேல் தொங்கும் மணிகளையே தாளமாகக் கொண்டு பகவானுக்கு திருப்பல்லாண்டு பாடினார். அவ்விடம்தான் மெய்காட்டிய பொட்டல் (உண்மையை காட்டிய இடம்) என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடம் மதுரை அருள்மிகு கூடழலகப்பெருமாள் திருக்கோயிலுக்கு கிழக்கே தற்பொழுதுள்ள ஜான்சிராணி பூங்கா. மெய்காட்டிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகுண்டஏகாதசிக்கு முந்திய பிரதமையில் பல்லாண்டு தொடக்கமாக இரவு சுமார் 9.00 மணியளவில் நடைபெறும். இவ்வருடம் 06.12.2010 அன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
                    தகவல்: வி.ரெ. அஜய்கிருஷ்ணா, TVS Matric HIgher Sec Shool,மதுரை
                    படம் உதவி: ஹரி ராமாநுஜதாஸன், மதுரை

வைணவச்சிம்மம்

    கவலைப்படாதே ஆசிரியர் ஸ்ரீ மாந். வைணவரத்னா ஸ்ரீ ராமுலு அவர்களுக்கு இவ்வாண்டு சென்னை நம்மாழ்வார் பவுண்டேஷனின் வைணவச்சிம்மம் விருது வழங்கப்பெற்றது. சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக வைணவத்தின் சிறப்பினை நாடறியப் பரப்பி வரும் இந்த ஸ்வாமி வடமொழி தென்மொழியோடு ஆங்கிலப்புலமையும் நிரம்பியவர். பகவத் கீதையில் ஆழங்கால்பட்டவர். ஸ்ரீ ரங்கம் நரசிம்மாச்சாரியார் ஸ்வாமியிடம் பாடங்கேட்டவர். பல நூல்களை எழுதியவர். இந்த வயதிலும் உற்சாகமாக பல வைணவ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர். தோற்றத்திலும், பேச்சிலும், எழுத்திலும் சவாலை எதிர்கொள்வதிலும், நடையாலும், சிம்மம் போன்ற ஸ்ரீ ராமுலு சுவாமிகளுக்கு வைஷ்ணவச் சிம்மம் விருது 16.12.2010  அன்று வழங்கப்பட்டது. எத்தனைப் பொருத்தம்? விருது வழங்கியவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.ஸ்ரீ கிருஷ்ணன் தூது

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்களுக்காக தூது வந்தான். அங்கே பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் கிரஷ்ணரை வரவேற்கிறார்கள். பகவான் அவர்களை நலம் விசாரித்து அனுப்பிவிட்டு நேராக விதுரன் மாளிகைக்குப் போகிறார். விதுரனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. நாம் எதிர்பார்க்காதபோது யார் நம் வீட்டுக்கு வருகிறார்களோ அவர்களையே "அதிதி" என்கிறோம். வருபவர்கள் பகவானாகவும் இருக்கலாம் அல்லவா! (அதிதி தேவோ பவ!) இங்கே பகவானே விதுரருக்கு விருந்தாளியாக வந்தான். இது என்ன பாற்கடலா! ஆதிசேஷனாகிய அற்புதப்பள்ளி அணையா? பச்சை ஆலிலையோ! சொன்ன நால்வகைச் சுருதியோ! கருதி இங்கு எழுந்தருளியமைக்கு என்ன மாதவம் செய்தது இக்குடில்! வில்லிபுத்தூராழ்வாரின் கவிதை நயத்திற்கு எடுத்துக்காட்டு!
    என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்? - இன்னொரு வகை.
    என்னமா தவம் செய்தது இச்சிறுகுடில்?
    நடக்காது (பகவான் வருவானா) என்கிற கேள்விக்குறி நடந்து விட்டால் வியப்புக்குறியல்லவா!
                        - சடகோப கல்யாணராமன். திருவெள்ளக்குளம்.
           

என்ன வழி? - தலையங்கம்

    நாம் இந்த நிலவுலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    உலகியல் கடமைகளை எல்லாம் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.
    தினசரி செய்தித்தாளையோ, தொலைக்காட்சி செய்திகளையோ பார்த்து நாட்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    ஒவ்வொரு நாள் செய்திகளையும் பார்க்கின்றபொழுது - கலியுகத்தின் முழு பரிமாணத்தையும் உணர முடிகிறது.
    பதட்டமான வாழ்க்கை ..... யாருமே தங்கள் வாழ்க்கை பத்திரமாக இருப்பதாக உணர முடியாத நிலை...... தேவைக்கு அதிகமான பொருளும் வசதிகளும் இருந்தும் ஏதோ இழந்து விட்டவர்கள் போன்ற சோகம்.....
    அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் கூட பகவான் இருக்கிறான்; பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையோடு வாழ்ந்த காலம், கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக்கொண்டிருக்கிறது. 100 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பவன் கூட போதவில்லை என்கிறான். அது மட்டுமல்ல இருக்கிறது போதாது என்று நினைத்து அசுரவேகத்தில் எந்த விதிமுறை தர்மங்களையும் அனுசரிக்காது குவித்துக்கொண்டே போகிறான். மருத்துவர்கள், நீதிபதிகள், கல்விமான்கள் என எங்கேயும் காசாசையும் ஊழலும் நாளுக்கு நாள் பெருகி வருவதைக் காண்கிறோம்.
    தப்பு செய்கின்றவர்களைப் பிடித்து தண்டிக்க முடிவதில்லை.
    100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன் பிடிபட்டு விடுகிறான். கோடி கோடியாகக் குவித்தவன் எந்தப் பாவத்திலிருந்தும் தப்பித்து விடுகிறான்...
    இதனை எப்படிச் சரிசெய்வது? சட்டங்கள் இயற்றியா? வழக்குகள் போட்டா?
    ஒரே வழி தான். ஆன்மிகம். ஒரு மனிதனின் ஆன்மிக உணர்வு - தூண்டப்பட்டு அவன் இயங்காத வரையில் இது நடக்காது. அவன் தானாகவும் திருந்த மாட்டான்; பிறராலும் திருத்த முடியாது;  நம்முடைய அந்தராத்மா நமது ஒவ்வொரு செயல்களையும் கவனிக்கிறது. அது நம்மை எப்படியும் தண்டித்து விடும்; நம்மை அமைதியிழக்கச் செய்து விடும்; என்ற எண்ணம் ஏற்படாத வரையில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.
    இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்.... உண்மையான தீர்வினை உணர்வீர்கள்.... பிறரையும் உணரச் செய்வீர்கள்.....

செய்திகள் சில வரிகளில்......

    பழைய நெய்வேலி ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா 17.12.2010 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் பரமபத வாசல் திறப்பு சிறப்பு நிகழ்ச்சியோடு நடைபெற்றது.
    காரைக்கால் பண்பலையில் காலை 6.10 மணிக்கு திருப்பாவை விளக்கவுரைகளோடு ஒலிபரப்பாகிறது. முதல் 1-10 பாசுரங்களுக்கு ஆலயதரிசன நிறுவன ஆசிரியரும், 10-20 பாசுரங்கள் வரை பேராசிரியர் ராஜகோபாலாச்சாரியாரும்,  21-30 பாசுரங்கள் வரை வரிச்சுக்குடி அரங்கநாதாச்சாரியர் ஸ்வாமிகளும் உரையாற்றுகின்றனர்.
    4.12.2011 மாலை கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஸந்நிதியில் ஆலயதரிசனம் நிறுவன ஆசிரியர் ஆஞ்சநேயர் ப்ரபாவம் குறித்து உரை நிகழ்த்த இருக்கிறார்.
    26.1.2011 அன்று திண்டுக்கல் தோப்பு ஸ்வாமி இல்லத்தில் நடைபெற இருக்கும் கூரத்தாழ்வார் திருநட்சத்திர விழாவில் ஆலய தரிசனம் நிறுவன ஆசிரியர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

    4.2.2011 வெள்ளிக்கிழமை திருநாங்கூர் பதினொரு கருடசேவை உற்சவம். இதனை ஒட்டி 5.2.2011 சனிக்கிழமை அன்று திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள்கோயில் திருமண மண்டபத்தில் கலியன் ஒலிமாலை 10 -வது மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக!

    கும்பகோணம் அய்யங்கார் தெரு, ( 17 வது தெரு) ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் மார்கழி 4,5 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி 5-ம் தேதி (20.12.2010) திங்கட்கிழமை மாலை ஆலயதரிசன நிறுவன ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன் தூது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    கள்ளக்குறிச்சி ஆர்ய வைஸ்ய சங்கம், திருவாய்மொழித் திருச்சபை, ஸ்ரீ வைஷ்ண கைங்கர்ய ட்ரஸ்ட் மற்றும் திருமகிழ்ந்தவல்லி திருப்பாவை பஜனைக்குழு ஆதரவில் 5.12.2010 அன்று காலை ஸ்ரீ மதி ஆசூரி.சுதா அவர்கள் பரகாலன் பைந்தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 2.1.2011 அன்று கடலூர் லட்சுமண ஸ்வாமிகள் மார்கழித்திங்கள் என்கிற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள்.
    விருத்தாசலம் வைணவ சீலர் கூ.ஆறுமுகம் செட்டியார் - அலமேலு ஆகியோரின் சஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தம் 25.11.2010 வியாழக்கிழமை காலை பகவத் பாகவத ஆசிகளோடு சிறப்பாக நடைபெற்றது. தம்பதியர் வைணவக் கைங்கர்ய சீடர்களாய் நூறாண்டு வாழ்க என ஆலயதரிசனம் வாழ்த்துகிறது.
நாராயணீயம்
    வைகுந்த ஏகாதசி அன்று திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் அண்ணன் கோயில் திருமால் அடியார் குழாமும் சென்னை தி.நகர் ஸ்ரீ ஹரி பக்த பஜனை மண்டலியும் இணைந்து ஸ்ரீமந் நாராயணீயம் அகண்டபாராயணம் நடைபெற்றது. டாக்டர். பன்னீர்செல்வம், என். பழனிவேல் அறங்காவலர் குழுத்தலைவர், செலீமான், ரெங்காச்சாரி, சுந்தர்ராஜன், திருவேங்கடத்தான், ஸ்தலத்தார்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்.....
ஆக்கூரில் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி பன்னிரு ஆழ்வார்கள் திருவீதி உலா
    17.12.2010 அன்று வெள்ளிக்கிழமை பன்னிரு ஆழ்வார்கள் வீதி உலா ஸ்ரீ ஆண்டாள் வைணவ வழிபாட்டுப் பேரவை சார்பில் நடைபெற்றது. சிறப்புச் சொற்பொழிவும் அன்னதானமும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்பேரவை, இளைஞர்களுக்கு ஆன்மிக ஞானம் ஊட்டி வழிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருபுவனம் ஸ்ரீ மந் நடனகோபால நாயகி சுவாமிகள் குருபூஜை விழா
    நடனகோபால நாயகி குருபூஜை (167 - வது ஆண்டு) 17.12.2010 வெள்ளிக்கிழமை 9.00 மணிக்குச் சிறப்பாக திவ்யகேளி பிருந்தாவன பஜனையுடன் நடைபெற்றது.
    அம்மையப்பன் க.சு.பா. ஸ்ரீ கிருஷ்ண பஜனை மடத்தின் 109 -வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா 17.12.2010 அகண்ட ஸ்ரீ கிருஷ்ண ராம பஜனையுடன் நடைபெற்றது. தகவல்: கே.எஸ்.பலராமன், திருவாரூர்.
    கோவை ஸ்ரீ கருட சேவாஸ்ரம ட்ரஸ்ட் திருப்பாவை 12 -ம் ஆண்டு விழா 16.12.2010 முதல் 14.1.2011 வரை திருப்பாவை சேவா காலம், உபந்யாசம், சாளக்கிராம திருமஞ்சனம், புருஷ சூக்தம், நாராயண சூக்தம் போன்ற வேத பாராயணங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தகவல்: அப்பன் தேவராஜன் ஸ்வாமி, கோவை.
    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ வைணவ மாநாடு 108 வைணவ திவ்ய தேசங்கள் புத்தக வெளியீட்டு விழா 20.11.2010 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளோடு பிற வைணவ அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
    சங்கராபுரம் அருகே ராவுத்தநல்லூர் சஞ்சீவிராயர் கோயிலில் 4.1.2011 அனுமத் ஜெயந்தி விசேஷமாகக் கொண்டாடப்
பட்டது. காலை திருமஞ்சனம், மாலை வெண்ணெய்காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: எ.ரங்கநாதன், பிரம்மகுண்டம்.
   

இராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது?

- முனைவர். இரா. அன்பழகன்

    இராவணனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் எது? இராமாயணக் கதையை அறிந்தவர்கள், சீதையைச் சிறை வைத்ததுதான் என்று ஒரே வரியில் இக்கேள்விக்கு விடை கூறுவர். சரி. சீதையை, இராவணன் சிறை வைத்ததற்குக் காரணமாக இருந்தது எது? சூர்ப்பநகை செய்த சூழ்ச்சி. சூர்ப்ப நகை சூழ்ச்சி செய்ததற்குக் காரணம் எது? இராவணன் சூர்ப்பநகைக்கு்ச் செய்த தீங்கு. இராவணன் சூர்ப்பநகைக்கு என்ன தீங்கு செய்தான்? இராவணன் சூர்ப்பநகைக்குத் தீங்கு செய்யக் காரணம் என்ன? அது எவ்வாறு அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் ஆயிற்று? பார்க்கலாம்.
    வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை அடைந்த சாதனை மனிதர்கள் சிலர் மிகுந்த உற்சாகமான மனநிலையை அடைவர். இதனை, உவகை மகிழ்ச்சி (குறள் - 531) என்று வள்ளுவர் கூறுகின்றார்.
    இத்தகைய மனநிலையை அடைந்தவர்கள் தங்கள் மனநிலையை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையேல் உள்ளத்தில் அகந்தை உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்பான எண்ணம் (ணாடணிதஞ்டணாடூஞுண்ண்ணஞுண்ண்) ஏற்படும். அதன் விளைவாக தவறுகள் பல புரிந்து வீழ்ச்சி அடைய நேரிடும்.
    இனியதொரு வாழ்வியல் உண்மையைக் கிரேக்கச் சிந்தனையாளர் எபிகூரியஸ் கூறுகின்றார். நம்நாட்டுச் சிந்தனையாளர் திருவள்ளுவரும் பொச்சாவாமை என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் இந்த உண்மையைத்தான் வலியுறுத்துகின்றார்.
    இராவணனுடைய வீழ்ச்சிக்கும் இம்மனநிலையே மூல காரணமாக அமைந்தது. இவ்வுண்மையை இராவணன் வீழ்ச்சிக்குப் பின்னர் வீடணன் மூலமாக வெளிப்படுத்துகின்றார் கம்பர்.
    இராவணன் மிகப்பெரிய சாதனைகள் புரிந்தவன்; கல்வி, கேள்வி, வீரம் ஆகிய மும்மைச் சிறப்புகளிலும் தன்னிகர் அற்றவனாக விளங்கியவன். இவ்வெற்றியின் காரணமாக அவனுடைய உள்ளத்தில் எழுந்த அகந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்பட வைத்தது.
    இம்மனநிலை காரணமாக திசைப் பயணத்தின்போது இராவணன், ஒரு தவறு செய்தான். அதுவே அவனுடைய வீழ்ச்சிக்கு அவனே இட்டுக் கொண்ட வித்தாக அமைந்தது.
    இராவணன் திசைப் பயணத்தின் போது பல போர்களைச் செய்தான். அப்போர்களில் குறிப்பிடத்தக்கது காலகேயர்களுடன் நிகழ்த்திய போர். ஏனெனில் அப்போரில் காலகேயருடன் இணைந்து தன்னை எதிர்த்துப் போர் செய்த தன்னுடைய மைத்துனனும், தன்னுடைய தங்கை சூர்ப்பநகையின் கணவனுமாகிய வித்துருசிங்கனையும் இராவணன் கொன்றான்.
    தன்னுடைய தங்கையாம் சலமிகுத்த
        சூர்ப்பநகை தன்னைக் கொண்ட
    மின் அனைய சுடர் இலைவேல்
        வித்துருசிங்கன் தனை வெங்களத்து வீழ்ந்தான்.
                        (இராமாயணம், உத்தரகாண்டம் 411)

    என்னும் பாடல் தொடர்களில் இராவணன் தன் மைத்துனனைக் கொன்ற செய்தி கூறப்படுவது காண்க.
    தன் கணவன் தன் அண்ணனாலேயே கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற சூர்ப்பநகை பெருந்துன்பம் உற்றாள்.
    "என் கணவனைக் கொன்று, நான் மங்கல அணியினை இழக்குமாறு செய்த என் தமையன், மூவுலகையும் புகழுடன் ஆள, அதைப் பார்த்துக் கொண்டு நான் வாழமாட்டேன்; என் தமையனைக் கொன்று விட்டு நானும் இறப்பேன்" என்று போர்க்களத்தில் இறந்து கிடந்த தன் கணவன் முன்னிலையில் உறுதிகொண்டாள்.
    ...... எனை நூல் இழப்பித்த இராவணனாம் என் தமையன்
    தன்னை மூவுலகு ஆள யான் கண்டு தார் அவுணர்
    மன்னே வாழ்வேனோ வாழ்வேனோ
   
    தாக்கியே காதனைத்தரைப்படுத்த தசமுகனார்
    நாக்கினையே நான் பிடுங்கி என்றன் நடலை நோய் அது தீரப்
    போக்குவேன் என் உயிர் என்று சூர்ப்பநகை புறப்பட்டாள்.
                    (இராமாயணம், உத்தரகாண்டம், 428, 432)

    என்னும் பாடல் அடிகள் சூர்ப்பநகை இராவணனைக் கொல்வேன் என்று உறுதி செய்ததைக் கூறுகின்றன.
    இராவணனைக் கொல்ல வேண்டும் என்பது சூர்ப்பநகையின் உறுதியான முடிவாயிற்று. எப்படிக் கொல்வது? அதற்காக அவள் செய்த சூழ்ச்சியே சீதையின் மீது இராவணனுக்குக் காதல் உண்டாகுமாறு செய்தது.
    இராமபிரான் மீது சூர்ப்பநகை காதல் கொண்டதாகவும், சீதை இராமனுடன் இருக்கும்வரை இராமன் தன்னை விரும்பமாட்டான் என்று கருதியதாகவும், சீதையை இராமனிடம் இருந்து பிரிப்பதற்காகவே இராவணன் உள்ளத்தில் சீதையின் மீது காதல் எழச்செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.

    உண்மைதான். ஆனால், சூர்ப்பநகையின் செயல்களைச் சிந்தித்துப் பார்த்தால், சூர்ப்பநகைக்கு இராமன் மீது காதல் கொள்வதைவிட, இராமனுக்கும், இராவணனுக்கும் இடையே பகைமை ஏற்படுத்த வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கின்றது.
    இராமன் மீது காதல் கொள்வதுதான் முதன்மையான நோக்கம் என்றால், அவள் நினைத்தவாறு சூழ்ச்சி செய்து இராமனிடம் இருந்து சீதையைப் பிரித்த பின்னர் இராமனைச் சந்திக்க முயன்றிருக்க வேண்டும்.
    இராவணன் தான் சாகும்வரை சீதையின் மீது கொண்ட காதலை விட முடியாமல் தவித்தது போல, சூர்ப்பநகையும் இராமனைத்தேடி அலைந்து தவித்திருக்க வேண்டும். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை.
    இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து அசோக வனத்தில் சிறை வைத்தபின் அவள் தன் நோக்கம் நிறைவேறியவளைப் போல அமைதி அடைகின்றாள். எனவே, இராமனுக்கும், இராவணனுக்கும் பகைமை உண்டாக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்திருக்கின்றது.

    இராமன் மீது காதல் கொள்ளுதல் அவளுடைய தலைமையான நோக்கம் அன்று என்பது தெளிவாகின்றது.
    இராவணனால் கொல்லப்பட்ட தன் அன்புக் கணவன் வித்துருசிங்கன் உடல் மீது விழுந்து புலம்பியபோது கூறிய உறுதிமொழியின் படி, இராவணனைக் கொல்வதற்குச் சீதையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றாள் என்றுதான் கருதத் தோன்றுகிறது.
    இராவணன் இறந்த பின்பு, புலம்புகின்ற வீடணன் கூற்றும் நம்மை இவ்வாறு நினைக்க வைக்கின்றது.
    கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது கேட்டுக்
    கொடுமை சூழ்ந்து
    பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்
    பழி தீர்ந்தாளே
                (கம்ப. 9926)

    என்பன வீடணன் கூற்றைச் சுமக்கும் வரிகள்.
    மைத்துனனை எவரும் கொல்லமாட்டார்கள். ஆனால் நீ கொன்றாய். அதைக் கேட்டுத்  தன் பல்லினால் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு, கொடிய பாவியாகிய சூர்ப்பநகை தன்னுடைய நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொண்டாளே என்பது இதன் பொருள்.
    சூர்ப்பநகை இராவணன் மீது கொண்ட பகை, நெடுநாள் இருந்த பகை; பெரும் சுமையாக இருந்த பகை. இராவணன் இறந்தவுடன் சூர்ப்பநகையின் உள்ளத்தில் இருந்த அந்த சுமை இறங்கிவிட்டது. வீடணன் கூற்றில் உள்ள நெடும்பாரப் பகை என்னும் தொடர் இதை உணர்த்துவதைக் காண்கின்றோம்.   
    ஒரு மனிதன் தான் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்திக்கும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடவும், தொடர்ச்சியாக வெற்றிகளைச் சந்திக்கும்போது அதிகக் கவனமாக மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு வாழ்வியல் உண்மை.
    இராவணனுடைய வீழ்ச்சியும், இராவணனுடைய வீழ்ச்சி பற்றிய வீடணனுடைய கூற்றும் நமக்கு இவ்வுண்மையை உணர்த்துகின்றன.

பெருநிலை வாழ்வு


    அச்சுதா என்றே அகத்தினுள் அழைத்தால்
        அளவிலா மகிழ்வெலாம் கூடும்;
    இச்சையாய் நெஞ்சுள் கேசவா என்றால்
        இனித்திடும் இன்பமும் சேரும்;
    மெச்சியே ராமா என்றதும் உந்தன்
        மெய்யதன் குறையெலாம் ஓடும்;
    பச்சைமா மலையாம் நாரணா எனும்முன்
        பதமுடன் அவனருள் கூடும்.
    ஹரி ஹரி நாம பக்தியில் உருகு
        அலைந்திடும் நெஞ்சமும் ஆறும்;
    உரிமையாய் கிருஷ்ண நாமமே பழகு
        உள்மன வேதனை தீரும்;
    கிரிதனில் வாழும் கோவிந்தன் நாமம்
        கேட்டினைத் துரத்திடும் தூரம்;
    விரிகுழல் கோபா லனவனின் நாமம்
        விரட்டிடும் கவலையை ஓரம்.
    பாற்கடல் மீது பள்ளி கொண்டவனைப்
        பக்தியால் வணங்கிடும் நேரம்
    கூற்றுவன் கூட ஓடியே மறைய
        கோதறு சாந்தியும் சேரும்;
    நேற்றைய நாளில் நேர்ந்ததை மறந்து
        நினைவினில் இன்று நீ பரமன்
    பேற்றினை வேண்டி பக்தியில் உருகு;
        பெருநிலை வாழ்வுனை நாடும்!

                - கே.பி.பத்மநாபன், கோவை.

பெரும்பூதூர் கருனையங்கடல்

-ரங்கராஜன், மதுரை    

    இவ்வாறு நாட்கள் ஓடிக்கொண்டிருக்க, இராமாநுஜரின் தாய் காந்திமதி உடல்நலக்குறைவால் திருநாடு அலங்கரித்தார். மிக்க துயர் கொண்ட இராமாநுஜருக்குத் துணையாக மனைவி தஞ்சமாம்பாள் மட்டுமே இருந்துவந்தார். எப்போதும் போல் இராமாநுஜர் பாடசாலையில் பயின்றுவர, யாதவப்பிரகாசர் சில உபநிஷத் வாக்யங்களுக்கு அத்வைத நெறியில் விளக்கம் கொடுக்க, அதை இராமாநுஜர் மறுத்து ்விசிஷ்டாத்வ நெறியில்சு தக்க சான்றுகளுடன் நிலைநாட்ட, இதை ஏற்றுக்கொள்ளாத யாதவப்பிரகாசர் இராமானுஜரை நோக்கி "எல்லா மாணவர்களும் நான் சொல்வதை ஆமோதிக்கின்றனர். நீ மட்டும் மெத்தப்படித்தவன் போல் நடந்து கொள்கிறாய். எனவே நீ இனிமேல் பாடசாலைக்கு வரவேண்டாம் என்றார். இராமாநுஜரும் ஆசாரிய அபிமானத்தால் யாதவப்பிரகாசரின் பாதங்களில் விழுந்து வணங்கி "அடியேனை ஆசிர்வதித்து விடைகொடுங்கள். இனிமேல் அடியேன் தேவரீரின் ஆணைப்படியே பாடசாலைக்கு வரமாட்டேன்" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
    பாடசாலையை விட்டு வெளியேறிய இராமானுஜர் மறுபடியும் தானே தன் வீட்டில் கல்வி பயின்று வந்தார். இவ்விடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அச்சமயத்தில் ஸ்ரீரங்கத்தை தலைமைபீடமாகக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்த்துவந்த பிரதம ஆசாரியரான ஆளவந்தார் என்ற யமுனைத்துறைவர் இருந்து வந்தார். இவருடைய பாட்டனாரான  ஸ்ரீநாதமுனிகள் காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர். இவர்தான் இடைக்காலத்திலே மறைந்திருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்களையும் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் சென்று தன் யோகாப்யாசத்தின் மூலம் மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற தலைப்புக் கொண்ட பதினொரு பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை நம்மாழ்வாரின் திருச்சிலை முன் சேவித்து நம்மாழ்வாரின் அருளினால் நமக்குப் பெற்றுத்தந்தவர். அத்துடன் ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்க்கவரும் பவிஷ்யதாசாரியார் (வருங்கால ஆசாரியர்) விக்ரகம் ஒன்றையும் நம்மாழ்வார் மூலம் பெற்று வந்தார். அந்த விக்ரகம் தன் பாட்டனாரிடமிருந்து பேரனான ஸ்ரீஆளவந்தாரிடம் இருந்துவர, அந்த விக்ரகம்போல் அமைப்புள்ள வருங்கால ஆசாரியரை எதிர்நோக்கியிருந்தார் ஸ்ரீஆளவந்தார். ஆனால் இதுவரை யார் அவர்? என்று காணமுடியவில்லை.
    சிலவருடங்களுக்கு முன்பு ஏற்கனவே இராமாநுஜரின் பிரபாவத்தைக் கேள்விப்பட்ட ஸ்ரீஆளவந்தார் இராமாநுஜரை ஸ்ரீரங்கமடத்திற்கு தனக்குப்பின்னால் தலைமை பீடாதிபதியாக கொண்டுவர எண்ணி அவரை அழைத்துவர ஸ்ரீரங்கத்திலிருந்து  காஞ்சிபுரம் சென்றிருந்தார். திருக்கச்சிநம்பிகள் மூலம் இன்னார்தான் இராமானுஜர் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆனால் அப்பொழுது இராமானுஜர் யாதவப்பிரகாசராகிய அத்வைதியிடம் கல்வி பயின்றுவந்ததால் அவரைத் தன்னுடன் அழைத்துவர முடியாத சூழ்நிலையில் தன் கண்குளிர அருள்செய்து "இக்குழந்தை இந்த அத்வைதியிடமிருந்து விலகி வரவேண்டும்" என்று காஞ்சி வரதராஜப்பெருமாளிடம் வேண்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பியிருந்தார்.
    இவ்வாறு நாட்கள் உருண்டோட, ஆளவந்தாரும் நோய்வாய்ப்பட்டார். இத்தருணத்தில் ஆளவந்தார் தன்னுடைய சீடர்களை அழைத்து தனக்குப்பின்னால் இராமாநுஜரை தலைமை பீடத்தில் அமர்த்தும் பொருட்டு அவரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார். அதன்படியே அவருடைய பிரதம சீடரான பெரிய நம்பிகள் காஞ்சிபுரம் சென்று ஆளவந்தாரின் விருப்பத்தை இராமாநுஜரிடம் தெரிவிக்க, இராமாநுஜரும் ஆளவந்தாரின் பிரபாவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் மிக்க மகிழ்ச்சியோடு காஞ்சி வரதராஜரிடமும் திருக்கச்சிநம்பிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு ஆளவந்தாரை தரிசிக்க பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் சென்றார்.
    ஆனால் இராமாநுஜருடைய ஆசை நிறைவேறவில்லை. காரணம் நோய்முற்றிய நிலையிலிருந்த ஆளவந்தார் திருநாடலங்கரித்து விட்டார். இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து வடதிருக்காவிரியை அடைந்தபோது ஆளவந்தாருடைய சரம திருமேனியை (பூதஉடல்) காவிரிக்கரையில் பள்ளிப்படுத்துவதற்காகக் கொண்டுவந்த நிலையில்தான் தரிசிக்க முடிந்தது. இந்நிகழ்ச்சி இராமாநுஜரை மிகவும் வேதனைப்படுத்தியது. இராமாநுஜரும் அரங்கநாதனை தரிசிக்காமலேயே காஞ்சிபுரம் திரும்பினார். ஆளவந்தாருக்குப் பின் ஸ்ரீரங்கமடம் அவருடைய குமாரர் திருவரங்கப்பெருமாள் அரையரின் தலைமையில் இயங்கிவந்தது.
    காஞ்சிபுரம் திரும்பிய இராமாநுஜர் ஆளவந்தாரை இழந்த வருத்தத்திலேயே இருந்து வருங்கால் ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து அடியேனுக்கு மனதில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தாங்கள் தேவப்பெருமாளிடம் (காஞ்சி வரதராஜர்) "கேட்டு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். நம்பிகளும் கேட்டுச் சொல்வதாக சொன்னார். இராமாநுஜர் மனத்தில் இருந்த ஆறு சந்தேகங்கள்.
    1) பரம்பொருள் யார்? 2)எது சித்தாந்தம்? 3)பகவானை அடைய சிறந்த வழி எது? 4)ஆத்மா பிரியும் தருவாயில் பகவானுடைய நினைப்பு வேண்டுமா? 5) இந்த தேகம் முடிவில் மோட்சம் கிட்டுமா? 6) அடியேன் யாரை ஆசாரியனாகப் பற்ற வேண்டும்?
    இராமானுஜர் தன்னுடைய சந்தேகங்களைச் சொல்லாமலேயே அவருடைய ஆறு சந்தேகங்களுக்கும் தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலம் விடைகள் கொடுத்தருளினார்.
    1) நானே (நாராயணனே) பரம்பொருள். 
  2)பேதமே சித்தாந்தம் (எல்லாம் ஒன்றல்ல) அசித்து (ஜடப்பொருள்) சித்து (ஜீவராசிகள்) ஈஸ்வரன் (சித்தையும் அசித்தையும் கொண்டு ஆள்பவன் பகவான்) இதுவே விசிஷ்டாத்வைத தத்துவம். 
   3) பகவானை அடைய சரணாகதி என்ற அவன் திருவடிகளைப் பற்றுதலே சிறந்த வழி. 
  4)சரணாகதன் பகவானை சரண் அடைந்த அப்பொழுதே அவனுடைய அனைத்து சேமங்களையும் பகவானே பார்த்துக் கொள்வதால் ஆத்மா பிரியும் போது பகவான் நினைப்பை  பகவானே உண்டாக்குவான். சரணாகதனுக்கு அந்தக் கவலை தேவையில்லை.
   5) சரணாகதனுக்கு தற்பொழுதுள்ள உடல் கழியும்போது (அதாவது இறந்தபின்) மோட்சம் கிட்டும். 
    6) மஹாபூர்ணர் என்ற பெரிய நம்பிகளை ஆசாரியனாக பற்றுக.
    சந்தேகங்களுக்கு விடைகிடைத்த மகிழ்ச்சியில் இராமாநுஜர் உடனே ஆசாரியரான  பெரியநம்பிகளை அடிபணிந்து தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவரைக்காண  மனைவி தஞ்சமாம்பாளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். அதேசமயத்தில் ஸ்ரீரங்கத்திலும் ஆளவந்தாருடைய சீடர்கள் ஒன்றுகூடி ஆளவந்தாரின் விருப்பமான இராமாநுஜரை ஸ்ரீரங்கமட தலைமைப் பீடத்தில் அமர்த்தும் பொருட்டு இராமாநுஜரை அழைத்துவர மறுபடியும் பெரியநம்பிகளை நியமித்தனர். பெரியநம்பிகளும் தன் பாரியாளுடன் காஞ்சிபுரம் புறப்பட்டார். இவ்வாறு புறப்பட்ட இருவரும் மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் திருக்கோயிலில் சந்தித்துக் கொண்டனர். இராமானுஜர் பெரிய நம்பிகளின் பாதத்தில்  தண்டன் சமர்ப்பித்து (சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்குதல்) தன் ஆசாரியனை பெருமாளே அனுப்பிவைத்து விட்டார் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து நிற்க, பெரிய நம்பிகளும் இராமாநுஜரை வாரி அணைத்துக் கொண்டு, தான் காணச்சென்றவர் எதிரிலே வந்து நிற்கிறாரே என்று நினைக்க, இருவரும் பெருமாளின் திருவருளை எண்ணி மகிழ்ந்தனர்.
    சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட இராமாநுஜர் பெரியநம்பிகளை நோக்கி, "காஞ்சி வரதராஜப்பெருமாள் அடியேனின் ஆசாரியனாக தேவரீரை நியமித்தருளினான். இதை திருக்கச்சிநம்பிகள் மூலம் அறிந்து கொண்டேன்". எனவே தேவரீர் அடியேனுக்கு பஞ்ச ஸமஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒரு குருவை அண்டி ஐந்து செயல்களை எடுத்துக் கொள்ளும் சடங்கு பஞ்ச சமஸ்காரம் எனப்படும். அவையாவன, தோள்களில் 1) சங்கு சக்கரம் தரித்தல் 2) தாஸ்யநாமம் பெறுதல் 3) திருமண்காப்பு அணிதல் 4) மூன்று மந்த்ரங்களை பெற்றுக்கொள்ளுதல் 5) பெருமாளுக்கு திருவாராதனம் செய்தல்) செய்வித்தருள வேண்டும் என்று வேண்ட, பெரிய நம்பிகளும் ்குழந்தாய்! இந்த புண்ணிய வேள்வியை காஞ்சி வரதராஜப்பெருமாள் சன்னிதியில் வைத்துக் கொள்வோம்சு என்றார்.
    இதைக்கேட்ட இராமாநுஜர் பெரியநம்பிகளை அடிபணிந்து இவ்வாறு வேண்டினார். ்அடியேன் இனி ஒரு நொடிப் பொழுதும் தாமதிக்க முடியாது. அடியேன் மஹான் ஆளவந்தாரை தரிசிக்க எவ்வளவு மனக்கோட்டை கட்டினேன். ஆனால் விதியின் விளையாட்டால் முடியாமல் போய்விட்டது. மின்னின் நிலை இல மன்னுயிர் ஆக்கைகள் என்பதை தேவரீர் அறியாததா?சு என்று சொல்ல, இதைக் கேட்ட பெரியநம்பிகள் இராமாநுஜரின் ஆர்வத்தை அறிந்து அக்கோயில் வளாகத்திலுள்ள மகிழமரத்தின் கீழ் அமர்ந்து திவ்யமான முறைப்படி பஞ்சஸம்ஸ்காரம் செய்துவைத்தார். அவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்த நாள் ஒரு ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமிதிதி அன்று. அத்திருநாளே இன்றும் மதுராந்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் "எம்பெருமானார் பஞ்ச ஸம்ஸ்கார வைபவமாகக்" கொண்டாடப்படுகிறது.
    அனைவரும் மதுராந்தகத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அடைந்தனர். அங்கு இராமாநுஜரின் பாரியாள் தஞ்சமாம்பாளுக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தார் பெரியநம்பிகள். இராமாநுஜரும் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை பெரியநம்பிகளின் குடும்பத்திற்கு ஒதுக்கி அவர்களை அங்கு குடியமர்த்தினார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தார். பெரியநம்பிகளுக்கு பணிவிடை செய்து கொண்டே அவரிடம் திவ்யப்பிரபந்தங்களின் விரிவான பொருளை கற்று வந்தார்.
                                     - தொடரும்.

மேலத்திருமாளிகை ஸ்வாமிகள் காட்டிய ஆழ்வாரின் அழகு.

    அது ஒரு கார்த்திகை நாள். முற்பகல் 11.00 மணியிருக்கும். ஸ்வாமியின் திருமாளிகைக்கு அடியேன் ஏதோ ஒரு காரியமாகச் சென்றிருந்தேன்.
    ஸ்வாமிகள் அப்போது திருமாளிகையில் இருப்பாரோ என்று கொஞ்சம் சந்தேகமாகத்தானிருந்தது. அதற்கேற்றார்போல், அவர் சன்னிதிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.
    ஸ்வாமியிடம் ஒரு பழக்கம் உண்டு.
    அவருக்கு முதன்மையான செயல் ஆழ்வார் கைங்கர்யம். கல்யாண ரங்கநாதர் கூட அதற்குப் பிறகுதான்.
    ஒரு பாகவதர் ஒருமுறை அடியேனிடம் ஸ்வாமிகளைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
    "ஸ்வாமிகள் ஆழ்வார் கைங்கர்யமோ, வேறு சன்னதி விசேஷமோ எதுவாயினும் அரைமணி நேரத்திற்கு முன்னால் வந்து காத்திருப்பார். அத்யாபக, வேதபாராயண கோஷ்டியையோ, ஆழ்வாரையோ காக்க வைத்து விட்டு பிறகு வருவதில்லை.
    ஆழ்வாருக்காகத்தான் நாம் காத்திருக்க வேண்டுமே தவிர, ஆழ்வாரை நமக்காக - நம் சௌகரியத்துக்காக காக்க வைக்கலாமா?" என்பாராம்.
    கார்த்திகை நாளல்லவா! திருமங்கையாழ்வார் திருமஞ்சன கோலத்தில் அபாரமாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார்.
    கோஷ்டி நடந்து கொண்டிருந்தது.
    அடியேன் தூரத்திலிருந்து சேவித்துக் கொண்டிருந்தேன்.
    மதியம் 1 மணி ஆயிற்று.
    பாலும், சந்தனமும், இளநீரும் என பலவித பரிமள கந்தங்களால் அழகு ஒளிர ஆழ்வார் காட்சி தந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளாக எடுத்து ஸ்வாமிகள் தந்து கொண்டிருந்தார்.
    தூப தீபம் ஆயிற்று.
    எல்லாம் முடிந்த பிறகு மங்கள கோஷத்தோடு கோஷ்டி புறப்பட்டது. அடியேனை அழைத்தார்.
    ஆழ்வாரின் பேரெழிலை சாதாரணமான நேரத்தில் தரிசிக்க முடியாது. இங்கே வந்து பார் என்றார். முன்னழகு சொக்க வைக்கும் என்று சொன்னால், பின்னழகு மயக்கம் போட வைக்கும்.

    ஆழ்வாரை பல கோணங்களில் சொல்லிச் சொல்லி ரசிக்க வைத்தார். ஸ்வாமியே ஒரு அபாரமான ரஸிகர். ராமாயணத்தில் நிபுணர். சில நேரங்களில் வான்மீகியின் சுலோகங்களில் வரும் சுவையான இயற்கை வர்ணனைகளை ரஸமாக எடுத்துரைப்பார். எனக்கு சுலோக அழகு ஒரு பக்கம் இருந்தாலும், அதனை சுவைத்துச் சுவைத்து சொல்லும் சுவாமியின் முகபாவமும், உணர்ச்சியோடு வரும் வார்த்தைகளும் அப்படி இப்படி நகராது கேட்க வைக்கும். "யாருக்கு என் சொல்லுகேன்" என்று திருக்கோட்டியூர் நம்பிகளின் நிலையில் இன்றி அடியேன் போன்றோருக்கும் ரசிக்கும்படி எடுத்துரைத்த விதம் அடியேன் நெஞ்சில் அகலாமலிருக்கிறது.

    ஒரு முறை ஸ்வாமி சொன்னார்.
    "ஆழ்வாரின் அழகை அணு அணுவாக ரசித்தவர் யார் தெரியுமா?"
    அடியேன் ஆசாரியரே சொல்லட்டும் என்று மௌனமாக இருந்தேன்.
    சொன்னார். "வேறு யாரால் சொல்ல முடியும் . நமது மாமுனிகளைத் தவிர......."
    ஆழ்வாரின் குணானுபவத்தை சௌந்தர்ய லாவண்ய அழகோடு இணைத்து ரசித்து மங்களாசாசனம் செய்ய அவரை விட்டால் யார்?
    ஸ்வாமி ரசனையோடு அந்தப்பாடலை வார்த்தை வார்த்தையாகச் சொல்லி வர்ணித்த அழகு.... என் நெஞ்சினுள் நீங்கா நினைவாய் நெகிழ வைத்துக் கொண்டேயிருக்கிறதே!
    அடுத்து முறை திருநகரி ஆழ்வார் திருமஞ்சனம் சேவிக்கும் போது இந்த மங்களாசாசனப்பாடல் உங்கள் கைகளில் இருக்கட்டும்.
    அணைத்தவேலும், தொழுதகையும், அழுந்திய
    திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
    குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும்,
    நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடிந்த காதும்,
    அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த
    கழுத்தும், அகன்ற மார்பும், திரண்ட தோளும், நெளித்த
    முதுகும், குவித்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய
    சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும்
    தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்,
    சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்
    தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக்காலும்
    குளிரவைத்த தருவடி மலரும், வாய்த்த
    மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
    வாடினேன் வாடி வாழ்வித்தருளிய,
    நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும்
    பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

மார்கழி கோலமும் மகளிர் நலனும்

-டி.கே. ஸ்ரீ நிவாஸன், சென்னை

                                                 திருமலையில் திருப்பாவை

             மாதங்களில் நான் மார்கழியாக  இருக்கிறேன் என்றான் கண்ணபிரான். அது பீடு உடைய (பெருமை உடைய) மாதம். அது நாளடைவில் மருவிப் பீடை மாதம் ஆயிற்று. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.
    விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
    மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்.
    ஆழி மழைக்கண்ணா என்ற திருப்பாவை - 4 -வது பாடலில் விஞ்ஞான அறிவியல் கருத்தும் காணலாம். மழை எப்படி பெய்கிறது என்பதை நாம் இன்று அறிவோம். சூரியனின் வெப்பத்தால் கடல் (நீரியல் சுழற்சி முறை)  நீர் நிலைகளிலுள்ள தண்ணீர் ஆவியாக மாறி மீண்டும் மழையாக பொழிவதை அன்றே ஆண்டாள் உரைத்துவிட்டாள்.
    திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. கிருஷ்ணவதார காலத்தில் ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை தானும் மேற்கொண்டாள்.
    முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் அவதாரங்களின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது..
    பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தில் பூசணி பூ வைத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. அதிகாலையில் பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப் போகும்.
    பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது. வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியதற்கு காரணம் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷ்ண நிலையும் சமனடையும். சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவராசப்பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
    மார்கழி மாதத்தில் கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள் மார்கழியில் இல்லை.

    ஒவ்வொரு மாதத்திற்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழிக்கு "கேசவன்" என்பது பெயர். கேசவன் என்பதற்குக் கூந்தல் என்றும், "கேசி" என்னும் அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்கு பெயர் என்றும் கூறுவர்.
    இந்த மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்தார். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தார். விப்ர நாராயணர் என்பது இவரது இயற்பெயர். இவரது பாடல்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றில் அடங்கியுள்ளன. தன் வாழ்க்கையை உணர்ந்து, நெறியை மாற்றிக்கொண்டு பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டார். நாமும் ஆத்ம விசாரம் செய்து நம் தவறை மாற்றிக்கொண்டு நல்வழியில் வாழ்க்கையை நடத்த வேண்டும். மாறுதலே உலகத்தில் நிரந்தரம்.
    மார்கழி மாத தொடக்கத்தில் தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்தது. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தது மார்கழி மாதமே. வைகுண்ட ஏகாதசி திருநாள் மார்கழி மாதத்தில் தான் வருகிறது.
    மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீ அனுமத் ஜெயந்தி. மார்கழி அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் வாயு மைந்தன் பிறந்தார். அறிவு, வலிமை, புகழ், தைரியம் இவற்றில் சிறந்தவரான அனுமன் தன் வாழ்க்கையை சேவைக்காக அற்பணித்தார்.
    மஹா விஷ்ணுவுக்கும் அனுமனுக்கும் உகந்த மார்கழி மாதத்தில் நாமும் இறைவனை வழிபட்டு சேவை மூலம் சகல நன்மைகளும் பெறுவோம்.

குலசேகர ஆழ்வார் பாசுரங்களில் உவமைகள்

 -புலவர். ம.நா.சந்தானகிருஷ்ணன்

    உலகில் இலக்கியங்களைப் படைப்போர் உவமைகளைப் பொருத்திப்பாடி இலக்கிய இன்பத்தை மிகுவித்துள்ளனர். ஆழ்வார்களில் தனிச்சிறப்புப்பெற்றுள்ள குலசேகரஆழ்வார் தாம் அருளிச்செய்த பெருமாள்திருமொழித் திருப்பாசுரங்களில் தனித்தன்மை வாய்ந்த உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அப்பாசுரங்களைப் பாடினால் பக்தி வளரும். படித்தால் இலக்கிய இன்பம் கிடைக்கும்.
    திருவித்துவக்கோட்டுப் பெருமானைப் பாடியுள்ள திருமொழியில், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வோர் உவமையைக் கூறி விளக்கும் முறை நவில்தொறும் இன்பம் பயப்பதாய் அமைந்துள்ளது. ஆழ்வாருடைய நோக்கம் திருமாலின் திருவடிகளை அடைக்கலமாக அடைதலேயாகும்.
    பறக்கும் இயல்பினைப் பெற்றுள்ளமையால் பறவைகள் அப்பெயரைப் பெற்றுள்ளன. பறவைகள் பறப்பதும், பின்னர் மரங்கள் போன்ற இடங்களில் அமர்வதும் இயல்பு. எங்கும் அமராமல் எப்பொழுதுமே பறந்து கொண்டு இருத்தலும் இயலாது. பறக்காமல் எல்லா நேரமும் அமர்ந்து கொண்டிருந்தலும் இயல்பு அன்று. வீட்டின் உச்சிப்பகுதி, மரத்தின் கிளைகள், கோபுரங்கள், பிறகட்டடங்கள் முதலியவற்றின் மீது பறவைகள் அமரும். விரும்பும் பொழுது பறப்பதும், மறுபடி எங்காவது அமர்வதும் அவற்றிற்கு இயல்பு. பூமியின் மீது இது நிகழ்கின்றது. ஆனால், கடல்பரப்பின் மீது இது இயல்பன்று. பரந்துபட்டது கடல். அதனால் அதற்குப் பரவை என்ற பெயரும் உண்டு.

    கரையை ஒட்டி கடலில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் உச்சி மீது பறவை ஒன்று அமர்ந்து கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியது. கப்பல் சென்று கொண்டிருந்தபொழுது, பறவையும் பறக்காமலே சென்று கொண்டிருந்தது. தன் முயற்சியில்லாமல் பயணித்தல் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவது இயல்பே. கடலில் கப்பல்மிக நீண்ட தூரம் சென்று விட்டது. அப்பொழுது அந்தப்பறவை பறக்கத் தொடங்கியது. பறந்து பறந்து பார்த்தது. அமர்வதற்கு எங்கும் இடமில்லை. பறக்குமிடம் கடல் ஆதலால், அந்தப்பறவை அமர்வதற்கு மரங்களோ கட்டடங்களோ வேறெதுவுமோ இல்லை. அமர்வதற்கு  இடமில்லாமல் பறந்து திரிந்து, கப்பலைச் சுற்றிச் சுற்றி வந்து, அந்தக் கப்பலின் பாய்மரத்தின் உச்சியிலேயே மீண்டும் அமர்ந்தது. பறவைகளில் சிறிய உடலினைப் பெற்றுள்ள பறவைகளும், பெரிய உடலினைப் பெற்றுள்ள பறவைகளும் உண்டல்லவா? ஆழ்வார் "மாப்பறவை" என்று குறிப்பிடுவதால் அந்தப் பறவை உடலால் பெரியது என்பதும் புலனாகின்றது. பெரிய உடலைக் கொண்ட பறவை நீண்ட நேரம் பறத்தலும் அரிது.
    தாம் இருந்த சமயத்தை விட்டுவிட்டுப் பிற சமயங்களுக்குச் சென்று, மீண்டும் முன்பிருந்த சமயத்திற்கே வருவோரைக் காண்கின்றோம் அல்லவா? தாம் இருந்த இயக்கத்தை விடுத்து, வேறு இயக்கங்களுக்குச் சென்று மீண்டும் பழைய இயக்கத்திற்கே வந்து சேர்வோரையும் பார்க்கிறோமல்லவா? (அப்பர் என்று போற்றப்பெறும் திருநாவுக்கரசர் பெருமான் பிறசமயம் புகுந்து சிலகாலம் இருந்து மீண்டும் தம் சமயத்திற்கே வந்தார் என்பதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம்).திருமழிசையாழ்வாரும் பல சமயங்களில் இருந்து வைணவ நெறியில் நிறைவாக நின்றவர்.
    திருமாலின் திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்து, பிற சமயத்தில் அல்லது பிற தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, மீண்டும் திருமாலின் திருவடியை அடைக்கலமாக வேண்டித் திரும்பியோர் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிலையில் உள்ளவர்களைப் பற்றி ஆழ்வார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
    "எங்குச் சென்றாலும் எனக்கு உய்வு என்பது இல்லை. எனக்கு உய்வு பெறும் இடம் உன் திருவடிகளே" என்று திருமாலிடம் கூறுகின்றார்.
    "கோபத்தை வெளிப்படுத்தும் கண்களையும் வலிமையான உடலையும் பெற்றிருந்ததும், கம்சனால் ஏவப்பட்டதுமான குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனே! உன் திருவடிகளே எனக்கு அடைக்கலம். வேறு எங்குச் சென்றாலும் எனக்கு உய்வு இல்லை என்பதை உணர்ந்தேன். அலைகடல் நடுவே சென்று கொண்டிருக்கும் கப்பலின் உச்சியில் அமர்ந்துள்ள பெரிய பறவையானது அனைத்துத் திசைகளிலும் பறந்து திரிந்து கரைகாண இயலாமல் திரும்பி வந்து மரக்கலத்தின் உச்சியில் அமர்வதைப் போல உம் திருவடிகளையே அடைக்கலமாக அடைகின்றேன். எனக்கு வேறு புகலிடம்இல்லை" என்று வித்துவக்கோட்டுப் பெருமாளிடம் அடைக்கலம் கோருகிறார் குலசேகர ஆழ்வார்.
    "வெங்கண்திண் களிறுஅடர்த்தாய் வித்துவக்கோட் டம்மானே!
    எங்குப்போய் உய்கேன்உன் இணையடியே அடையலல்லால்
    எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே"
    என்பதே குலசேகர ஆழ்வார் அருளிய அப்பாசுரம்.

    குலசேகர ஆழ்வார் உலகியலில் ஈடுபட்டு அலைபாயும் மனம் கொண்ட தனக்குப் பறவையையும், தன்னைக் காத்து, தனக்குப்புகலிடம் தந்த திருமாலின் திருவடிகளுக்குக் கப்பலின் பாய்மர உச்சியையும் உவமையாக்கிக் கூறும் நயம் இலக்கிய இன்பம் நல்குகின்றது. தீய சக்திகளை அழிக்கும் திருமாலின் ஆற்றலை "வெங்கண் திண்களிறு அடர்த்தாய்" என்ற பகுதியால் சுட்டுகின்றார்.
    அலைபாயும் மனத்தை அடக்கி, எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளையே அடைக்கலமாகக் கொண்டு வழிபட்டு திருமாலின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோமாக!

கண்ணன் பிறந்தான்


   - எஸ். சுதர்சனம், நங்ககைநல்லூர்

                                       யசோதை கண்ட விஸ்வரூப தரிசனம்
    திருணாவர்த்தன் என்னும் புயல்வடிவு கொண்ட அசுரனை அழித்த கண்ணன் யசோதையின் மடியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அசுரனைக் கொன்ற களைப்போ என்று நினைத்து வியந்தாள் யசோதை. சற்றே கண் விழித்ததும் கண்ணனுக்குப் பாசத்துடன் பாலூட்டினாள்.
    "ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
    இரு முலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே"
    மார்பகங்களில் தாய்ப்பால் சரியாக வராதபோது மார்பகங்களை முட்டி முட்டி பாலுண்ணும்போது தாய் பெறும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அந்த இன்ப நுகர்ச்சியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எப்படி யசோதை வேண்டினாளோ அப்படியே பாலுண்டான் கண்ணன் என்று நினைக்கத் தோன்றுகிறது. பால் மிகுதியால் குழந்தை மூச்சுத்திணறிக் கொண்டே மாறி மாறி பாலைச் சுவைக்குமாம். பெரியாழ்வாரின் பத்துப் பாசுரங்கள் - தன்னை யசோதை பிராட்டியாகவே நினைத்துக் கொண்டு, குழந்தையை பாலுண்ண அழைக்கும் பாசுரங்கள். இப்பாசுரங்களை சொல்லிக் கொண்டே குழந்தைக்குப் பால் கொடுத்தால் தாய்க்கும் சேய்க்கும் என்றென்றும் சுகம் உண்டாகும் என்று ஞானிகள் உபதேசம் செய்கிறார்கள். பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையின் அருமை! குழந்தைக்குத் தீங்கு வந்துவிடுமோ! என்று ஒரு பக்கம் கலக்கம். குழந்தையின் புன்சிரிப்பையும் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டே குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை வாய் திறந்து கொட்டாவி விடுகிறான். குழந்தை வாயினுள் யசோதை அனைத்து உலகங்களையும் கண்டாள். 

ஆகாசம்,அந்தரிக்ஷம், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், அக்னி, வாயு, சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், நதிகள், வனங்கள் அனைத்தையும் கண்டாள். யசோதை கண்ட ஆச்சரியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமோ? சற்று மயக்க நிலையைக் கூட அடைந்தாள் என்று கூறலாம். "வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே" என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
   "அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
    கண்டம் இருந்தவா காணீரே! காரிகையீர் வந்து காணீரே!"

    என்று பாடுகிறார். அண்ட பகிரண்டம் அனைத்தும் விழுங்கிய கழுத்தின் அழகைக் காண நம்மையும் அழைக்கிறார் ஆழ்வார்.
    அனைத்துலகையும் அமுது செய்தருளின கண்டம் - திருக்கழுத்தின் அழகை திருப்பாணாழ்வார் எப்படி அனுபவிக்கிறார் என்று பார்ப்பபோமா?
    அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலமெழுமால் வரை முற்றும்
    உண்ட கண்டங் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
    அமலனாதிபிரான் என்னும் பாசுரத்தில் இப்படி அனுபவம். அண்டத்தில் வாழும் தேவர்கள் மனிதர்கள், திர்யக், ஸ்தாவரம் என்னும் நால்வகைப்பட்ட ஜீவர்களையும் அவர்கள் வாழுமிடமான அந்த அண்டங்களையும், அந்த அண்டங்களைச் சுற்றியிருக்கும் ஏழு ஆவரணங்களையும், அந்த அண்டங்களுக்கு உள்ளிருக்கும் ஐம்பது கோடி விஸ்தீர்ணமுடைய பெரும்பூமியிலும், குலமலைகளாலும், உபலக்ஷண முறையிலே காட்டப்படும் காரியப்பொருள்கள் அனைத்தையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷிப்பதற்காக விழுங்கிய எம்பெருமானின் திருக்கழுத்தை அனுபவிக்கிறார் திருப்பாணாழ்வார்.
    மற்றொரு சம்பவம். கோபச் சிறுவர்களுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவர்கள் யசோதையிடம் வந்து கண்ணன் மண் தின்றான் என்று புகார் செய்தார்கள். கண்ணனைக் கூப்பிட்டாள் யசோதை. மண்ணைத் தின்றாயா? என்று கோபத்துடன் கேட்டாள். இல்லையே என்றது குழந்தை. வாயைத் திற. நானே எது உண்மையென்று பார்க்கிறேன் என்று யசோதை சொன்னதுதான் தாமதம். ஸ்ரீ ஹரி லீலா மாநுஷ பாலகன் வாயைத் திறந்து காட்டினான். அழியா சகல ஐச்வர்யங்களையும் உடைய கண்ணன் வாயைத் திறந்து காட்டினான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். லீலா ரஸத்துக்காகவே மானிட உருவில் அவதரித்த குழந்தையாயிற்றே! யசோதை கண்ணன் வாயில் ஸர்வ ஜகத்தையும் (விஸ்வம்) கண்டாள். அசையும், அசையாத பொருட்கள், பர்வதங்கள், தீவுகள், ஸ்வர்கலோகம் போன்ற எல்லா லோகங்களையும் கண்டாள்! விசித்ர தர்சனம்!
                                        - தொடரும்.

ஸ்ரீ கம்பன் கவி அற்புதம்

    - எம்பார்.கு.வெங்கடாச்சாரி, திருநகரி

    செவிகளால் பல கேட்டிலர் ஆயினும் தேவர்க்கு
    அவி கொள் நான்மறை அகபொருள் புறப்பொருள் அறிவார்
    கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்பொருள் காலால்
    புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்.

    இப்பாசுரம் கம்ப நாட்டு ஆழ்வாரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப்படலத்தில் உள்ளது. இது ஒரு அற்புதம். கவித்திறம் எல்லை இல்லாதது. இதோ விளக்கம்: காலால் புவி கொள் நாயகற்கு - எம்பெருமான் மாவலியிடம் மூவடி நிலம் பெற்று உலகு அனைத்தையும் தன் அடிக்கீழ் கொண்டு வந்தமை எல்லோரும் அறிந்ததே. அப்படி எனில் இரணியன் வதைப்படலத்தில் வாமனன் எப்படி வர முடியும்? நரசிங்க அவதாரத்துக்கு பிறகே வாமனாவதாரம். பாடலை நன்கு ஆராய்ந்தால் உண்மை நிலை தெரிய வரும். "காலால் புவி கொள் நாயகற்கு" என்பதை காலால் என்பதை தனியாக அனுபவிக்கவும், புவி கொள் நாயகற்கு என்பதை தனியாக, அனுபவித்தும் பொருள் கொள்ளலாம். நரசிங்க அவதாரத்துக்கு முன்னும் நிலம் கொண்டான். பின்னும் நிலம் கொண்டான். முன் நிலம் கொண்டது ஸ்ரீ வராக அவதாரம். இதை ஸ்ரீ நம்மாழ்வார் "கோலவராகமொன்றாய் நிலம் கோட்டிடைகொண்ட என் தாய்" என்று பாடுகிறார்.

    ஆக, ஞானப்பிரான் உருவம் மனதினால் எண்ண முடியாத ஒன்று. ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று திருவிருத்தம் பேசும். இப்போது காலால் என்ற பதத்துக்கு இரண்டு பொருள் கொள்ளலாம். முதலில் திருமங்கை ஆழ்வார் அவன் திருவடியை மனதினால் கூட அளவிட முடியாத ஒன்று என்று "சிலம்பினிடை சிறுபரல் போல் பெரிய மேரு" என்று திருநாங்கூர் பாசுரத்தில் காட்டுகிறார். கால் சிலம்பு (தண்டை) அதன் உள் இருக்கும் "பரல்" பெரிய மேடு பர்வதம் என்றால் அத்தண்டை எவ்வளவு பெரியது? திருவடி எவ்வளவு பெரியது? ஆக அவன் திருவடியை மனதில் கொண்டு "காலால்" என்றார் கம்பநாட்டு ஆழ்வார்.  இரண்டாவதாக பல காலம் அலைந்து காலால் நடந்து பல பெரியவரிடம் "செவிகளால் பல கேட்டிலர்" ஆயினும் என்றும் பொருள் கொள்ளலாம். ஸ்ரீ வராக நாயனார் என்றே கௌசிக புராணம் கூறும்- "கற்றலில் கேட்டலே நன்று"செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருக்குறள் கூறும். ஞானம் அனுஷ்டானம் இரண்டும் பெறுவர் ஞானப்பிரான் திருவடி காண்பவர்; கவிகள் ஆகுவார் என்றும் மெய்ப்பொருள் காண்குவார் என்றும் கூறப்பட்டது. "கிடந்தானை கண்டு ஏறாதே பலகாலும் சந்தை இட்டு கற்கை" என்று ஸ்ரீ.உ.வே. காஞ்சி சுவாமி சொல்லுவர்; நினைத்தலும், வாழ்த்துதலும், வணங்குதலும், ஆகிய மூன்று முப்பது அறியார் ஆயினும்; இந்த ஒரு பாசுரம் வல்லார் எல்லாம் பெறுவர் என்பது நிச்சயம். முடிவாக "ஏனத்துருவாய் இம்மண்ணை இடந்தவன்" பூமி பிராட்டியை அடைந்தவன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருந்தி உள்ளமை தெளிவு.

எம்பார் வைபவம்

     இராமாநுஜரைக் காப்பாற்றி வைணவ சமயத்துக்கும் ஏன் உலக மக்களுக்கும் உயர்ந்த தொண்டு செய்யும் பேறு இருவருக்குக் கிடைத்தது. ஒருவர் திருநாமம் எம்பார். இன்னொருவர் திருநாமம் கூரத்தாழ்வான்.
    யாதவப்பிரகாசரின் சூழ்ச்சியால் ஆபத்தைச் சந்திக்கவிருந்த இராமாநுசரை எச்சரித்துக் காப்பாற்றி காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தவர் எம்பார். இவர் இராமாநுசரின் பிரதான சீடர் மட்டுமல்ல. இராமாநுசரின் சிறிய தாயாரின் குமாரர்.
    கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயருடைய இவருக்கு எம்பெருமானார் என்ற தனது பெயரையே அளித்தார் இராமாநுசர். அதனைச் சுருக்கி எம்பார் என்று அழைக்கப்பட்ட இவர் பெருமை சொல்லில் அடங்காதது.
    வைணவ ஆசார்யர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல அருளிச்செயல் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்று வாழ்ந்தவர்கள் அல்ல வைணவ ஆசாரியர்கள்.
    எனவே இவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் வைணவ மரபை அழகாக விளக்குகின்றன. இவர்களின் மேதா விலாசத்தையும், எளிமையான வாழ்க்கையையும், நாம் புரிந்து கொண்டு பின்பற்றுவதற்கு முயற்சிக்க இக்குறிப்புக்கள் பேருதவி செய்கின்றன.
    உதாரணமாக,
    பெரிய திருமொழியில் ஒரு பாசுரம். திருவாலி திவ்ய தேசத்திற்குரிய  பாசுரம். பகவான் தன் மனத்தில் இருந்தாலும், அவனைக் கலந்து அனுபவிக்க ஆசைப்படுகிறார் ஆழ்வார். ஞான தசையைக் கடந்து பிரேம தசை வந்து விடுகிறது. ஆழ்வார் நாயகி பாவத்தில் பாட ஆரம்பிக்கிறார். ஒரு வண்டினை அழைத்து, "ஏ வண்டே! வயலாளி மணவாளன் என்னைக் கவனிக்காது - என் பசலை நோயைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே! நீ போய், அவனையே நினைத்து நினைத்து உள்ளம் தடுமாறி, பசலை நோயினால் துன்புற்றிருக்கும் என் நிலைமையை எடுத்துரைப்பாய்சு என்கிறார். பாடல் இது.
    பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
    அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே
    மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
    பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!

    அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.
    எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர்.
    அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா செய்யப் போகிறது.
    வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை.
    வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்!
    எம்பாரின் திருவடிகளையும், அந்த வம்சத்தில் வந்த மேலத்திருமாளிகை ஆசாரிய வம்சத்தவர்கள் திருவடிகளுக்கும் பல்லாண்டு பாடுவோம்.

ஸ்ரீ ராம அனு யாத்திரை


12.9.2010 - ஞாயிறு

    இரயில் பயணத்தில் இன்று அதிகாலையில் விழித்தெழுந்து காலைக்கடன்களை முடித்து நீராடி, திருவாராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம், திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இரயிலிலேயே அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பிரசாதப்பட்டோம். காலை சுமார் 9.20 மணியளவில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடைந்தோம். உற்சாசமாக இரயில் நிலையத்துக்கு வெளியே வந்தோம்.
    இரயில் நிலையத்திற்கு வெளியே குளிர்சாதன வசதிகள் கொண்ட 16 பேருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் ஆகியவை அவற்றின் எண்களோடும், பெயர்களோடு ம் அணிவகுத்து நின்றன. ஏற்பாடுகளைக் கண்டு வியந்தோம்.
    1. சீதாராமன், 2.பரதன், 3.லட்சுமணன், 4.சத்ருக்கணன், 5.தசரதன், 6.கௌசல்யை, 7.சுமத்ரை, 8.வசிஷ்டர் 9. விஸ்வாமித்திரர் 10. குகன் 11. அனுமன் 12.சுக்ரீவன் 13. ஜடாயு 14.விபீஷணன்
    இவை யாத்ரீகர்களுக்கான பேருந்துகளும் அவற்றின் எண்களும்                  ஆகும்.
    15. கைகேயி: இது கூடுதலாகத் தேவைக்கு (குணீச்ணூஞு) வைக்கப்பட்டிருந்த பேருந்தாகும்.
    16. சுசேனா: இது மருத்துவக் குழுவுடன் கூடிய முதலுதவி வாகனம் (வேன்)
    17. சபரி:  இது தளிகைப் பணிக்கான பேருந்து.
    பெட்டிகளை லக்கேஜ் பாக்ஸில் வைத்து விட்டு அவரவர்கள் அவரவர்கள் பேருந்தில், அவரவர்கள் இருக்கையில் எவ்விதக் குழப்பமும், இடையூறும் இன்றி மகிழ்வுடன் விரைந்து சென்று அமர்ந்தோம். எல்லாப் பேருந்துகளிலும் ஒலி வாங்கி (மைக்), ஒலி பெருக்கி (ஸ்பீக்கர்)  ஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் அனுயாத்ரை மற்றும் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் பற்றிய உபந்யாஸங்களின் குறுந்தகடுகள் தயாராக இருந்தன.
    ஒரு பேருந்துக்கு இரண்டு தன்னார்வத்தொண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். யாத்ரீகர்களுடன் வித்வான்கள், வைதீகப்பெருமக்கள், அர்ச்சகர்கள், சான்றோர்கள் எனப்பல குழுவினர்கள் இந்த யாத்ரையில் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் இந்த யாத்ரையில் திருப்புல்லாணி  ஸ்ரீ .உ.வே. ஸூந்தர்ராஜ  ஐயங்கார் ஸ்வாமி, கபிஸ்தலம் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீநிவாசாச்சாரியர் ஸ்வாமி, திருத்தென் திருப்பேரை ஸ்ரீ.உ.வே. அரவிந்தலோசனன் ஸ்வாமி, திருக்கடிகை ஸ்ரீ.உ.வே. தொட்டாச்சார்யர் ஸ்வாமி, திருவெள்ளறை  ஸ்ரீ.உ.வே. விஷ்ணுசித்தன் ஸ்வாமி, திருக்குடந்தை அர்ச்சகர் ஸ்ரீ.உ.வே. சௌந்தர பட்டர் ஸ்வாமி, திருவழுந்தூர் அர்ச்சகர் ஸ்வாமி உள்ளிட்ட பல சான்றோர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அனுக்கிரகித்தார்கள்.
    இந்த வித்வான்கள் அவ்வப்போது பல பேருந்துகளுக்கு வந்து உபந்யாஸங்களைச் செய்தனர். யாத்ரீகர்களின் பல சந்தேகங்களுக்கு விடையளித்து நிறைவளித்தனர்.
    இன்று காலை இரயிலிலிருந்து இறங்கி சுமார் பதினைந்து நிமிடங்களில் சுமார் 600 பேர் அடங்கிய பேருந்துப் பயணம் துவங்கியது என்றால் இந்தப் பயணத்திட்டத்தைச் செயலாக்கியவரின் நிர்வாகத்திறனை என்னென்பது?
    குளிர்சாதனப் பேருந்தில், குளுமையான மனதோடும், எண்ணங்களோடும் உத்திரப்பிரதேசம் கான்பூர் இரயில் சந்திப்பிலிருந்து கல்யாண்பூர் வழியாக கானோஜ் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ள பிட்டூரை சேவிக்கும் பயணம் துவங்கியது.
    எங்களது பேருந்து எண் 4. பேருந்துப் பெயர் சத்ருக்கணன். பேருந்துப் பயணம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் பயணிகள் அனைவருமே தம்மை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக தாமே தம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுக்குள்ளான  இறுக்கத்தைத் தவிர்த்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டோம். பஜனைகள், பாடல்கள் எனப் பேருந்துப் பயணம் கலகலப்பாகியது. பயணத்தின்போது ஆங்காங்கே சத்சங்கங்களும் எங்களுக்குள் நடைபெற்றன. பலரிடமிருந்து பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
    செல்லும் வழியில் "தமஸாநதி" யின் தரிசனம் கிட்டியது.

தமஸா நதி - பிட்டூர்
 
 
    இந்த நதி சோனா நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவானதே இந்த நதியின் கரையில் தான். ஸ்ரீ வால்மீகி பகவான் தமது சீடர் பரத்வாஜரோடு  இந்த நதியில் நீராடிய போது வேடன் ஒருவன் க்ரௌஞ்ச பறவைகள் இரண்டில் ஒன்றை  கொல்வதைக் கண்டு சபித்து மாநிஷாத என்று தொடங்கும் ச்லோகம் ஒன்றினை உரைத்தார். அதுவே ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவாகக் கருவானது. பிட்டூர் வால்மீகி ஆச்ரமம் சென்ற பின் இது பற்றிய விபரங்களைக் காண்போம். பேருந்துலிருந்து கொண்டே தமஸா நதியைத் தரிசித்து மகிழ்ந்து நண்பகல் பிட்டூரில் கங்கை நதியின் கரையை அடைந்தோம்.

கங்கை நதி - பிட்டூர் 
 


  
    எம்பெருமான் உலகளந்தபோது சத்யலோகம் சென்ற அவரது திருவடியை நான்முகன்தனது கமண்டல தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்ய, எம்பெருமானின் திருவடியைத் தீண்டும் பேறு பெற்ற அந்தத் தீர்த்தமே கங்கையாகக்  பெருகிச் சிவபெருமானின் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டு பகீரதனின் கடுந்தவத்திற்காக இந்தப் பாரதமாம் புண்ணிய பூமியிலே இமயத்தில் இறங்கி யுகயுகமாக நமது தேசத்தை வளப்படுத்திக் கொண்டும் புனிதப்படுத்திக் கொண்டும் உள்ளது.
    அனைவரும் பெருமகிழ்வுடனும் குதூகலத்துடனும் கங்கையில் நீராடிக் களித்தோம். திருவராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம் கண்டருளப் பண்ணித் திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இந்தப் புனித யாத்ரையில் பல புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களிலும் சேதுவிலும் நீராடும் பாக்யமும் அங்கே அடியேனின் திருவாராதனப் பெருமாளுக்குத் திருமஞ்சனமும் திருவாராதனையும் செய்விக்கும் பாக்யமும் கிடைத்தது பெறும் பேறே!
ப்ரஹ்மா ஆச்ரமம் - பிட்டூர்
    கங்கைநதியின் நடுவே "ப்ரஹ்மா ஆச்ரமம்" எனும் பிரம்ம பாதம் உள்ளது. நதியின் பிரவாகத்துக்குள் இருந்தபடியால் தரிசிக்க இயலவில்லை. கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி யே கோஷங்களுடன் வழிபட்டு வந்தோம்.
    நண்பகல் 1.00 மணியளவில் புறப்பட்டு பிட்டூர் "ராம்ஜானகி இண்டர் காலேஜ்"என்ற கல்லூரி ஆச்ரமம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து "வால்மீகி ஆச்ரமம்" வந்தடைந்தோம்.                    
                                                                                               - தொடரும்.

அலகிலா விளையாட்டு


- மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியர்.

    "விட்டு விடு" என்பது தத்துவம்! வீடுமின் முற்றவும் என்பது சடகோபன் தண் தமிழ்; "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்பது தமிழ்மறை. தாய் தந்தையரின் விருப்பம் எதிரிடையானது. தயரதன் தனது வரங்களால் கட்டுண்டதால் கைகேயியின் வேண்டுகோளை மீறமுடியவில்லை. உண்மையில் ஸ்ரீ ராமன் வனம் புகுதலை அரசன் விரும்பவில்லை. அரசியோ (கைகேயி) ஸ்ரீ ராமன் நாட்டிலே இருப்பதையே விரும்பவில்லை; பரதனோ தாய் தந்தையர் மற்றும் பெரியோர்கள் கட்டளையையும் மீறி மரபின்படி ஒழுக எண்ணுகிறான். மக்களின் எண்ணத்தையும் மதிக்க எண்ணுகிறான். பரதன் ஸ்ரீராமனை மிகவும் வற்புறுத்தியபோதும் ஸ்ரீராமனின் உறுதி நம்மை வியக்க வைக்கிறது.
    லக்ஷ்மீ சந்த்ராத் அபேயாத்வா
    ஹிமவான்வா ஹிமம் த்யஜேத்
    அதியாத்ஸாகரோ வேபலாம்
    ந ப்ரதிக்ஞாம் அஹம் மிது:
    மதியை விட்டு ஒளி நீங்கினும் நீங்கும்
    (இமய) மலையை விட்டு பனி நீங்கினும் நீங்கும்
    கடலும் தன் கரை மீறினும் மீனும்
    தந்தைக்களித்த உரை கடவேன் யான்        (அ.கா. 112 - 28)
 
    இளவரசாவது யார்? என்ற ஓயாத இழுபறிப் போராட்டத்திற்கு அடியவனான பரதன் ஒரு முடிவு காண விரும்பினான். எம்பிரானுக்கு முடிசூட்டி அயோத்தி நகருக்கு அழைத்துச் செல்ல எண்ணினான் அடியனான பரதன்; முடிசூட மறுத்த மூத்தவனின் திருவடிகளைப் பெற்றிட எண்ணினான் பரதன்.
    "அண்ணா! இத்திருவடிநிலைகளில் ஏறிநின்று (அதிரோஹ) அருள்வீராக!" என்று இறைஞ்சி நின்றான்.   
    மனு, மந்தாதா என முன்னோர்கள் அரசாண்ட அரியணையிலே, முதன் முதலாக ஒரு புரட்சி செய்கிறான் பரதன்! முடியரசர்களாக இருந்தனர் முன்னோர்கள்; இன்று அயோத்தியின் கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே ஸ்ரீராமனின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட்ட திருவடி இணையின் தரிசனம்! அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவை என்று சூடிய செய்தியைக் கம்பன் கொண்டாடுவான்.
    பரதன் சூளுரைக்கிறான்!
    அடிகளைப் பெற்ற அடியவனும்
    சடைமரவுரியில்தான் இருப்பேன்
    அண்ணல் இராமன் திரும்பும் வரை
    அடியனும் தவசிதான். புறநகரில்
    காயும் கனியுமே என் உணவு
    கண்ணா! என் கனவு நின் வரவு!
    ஏழு இரண்டாண்டில் வரவில்லை எனில்
    வீழும் என் உடல் தீயதனுள்!
    இராம இலக்குவர் கலங்கினரே
    பரத சத்ருக்னரும் கலங்கினரே
    பார்த்தவர் கண்கள் கடல் நீரே
    பரிதியும் பசுத்தனன் வெறுமையுடன்!

    இராமாயணம் ஒரு உணர்வுக்கடல்! அலைகளே பாசத்தின் பாத்திரங்கள்! நுரைகளே கவிதையின் கவினுறு வரிகள்! இராமனும் பரதனும் அப்பழுக்கற்ற சகோதரர்கள்: ஒருவன் தாயின் உரையை மீறாதவன்: மற்றொருவன் தர்மமே தாயினும் உயர்ந்ததென்பவன். வாய்மையா? மரபா? அற்புதமான போட்டி இங்கே! கம்பன் இந்த அலகிலா விளையாட்டின் முடிவை அழகாக அறிவிக்கிறான். வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவள்ளல் தயரதன் என்கிறான். வாய்மையை  இராமன் மூலமாகவும் மரபினை பரதன் மூலமாகவும் காப்பாற்றுகிறானோ?
                                            - தொடரும்.

ஆசார்ய அநுக்கிரகம்

- ஸ்ரீ முஷ்ணம் கு. பட்டப்பா விஜயராகவாச்சாரி, சென்னை 

               ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடையவரும் குறிப்பு அறிந்து செயலாற்றும் வல்லமை படைத்தவரும் அன்பும், பண்பும் கொண்டவர் யாரோ அவரே ஆசார்யன் (குரு) எனப்படுவர். பண்டைய காலத்தில் அரண்யம் (காடு) என்று சொல்வர். அங்கு தனியிடத்தில் குடில் அமைத்து ஆசிரியர் வாழ்வர். அவருக்கு பணிவிடை செய்து மாணவன் கல்வி பயில்வான். கல்வியில் மனம் ஈடுபாட்டுடன் அமையும். கல்வியும் பதினான்கு ஆண்டுகளில் முடியும். ஆசிரியருக்கு கற்கும் கால பணிவிடைகளே குரு தட்சணை (சம்பளம்) யாக அமையும்.     அயோத்தியை ரகு என்ற அரசன் நீதி வழுவாது ஆண்டு வந்தான். அப்போது கல்விச்சாலைகளின் சிறப்பு அதிகம். அப்படிப்பட்ட கல்விச்சாலையில் "வரதந்துசு என்ற பேராற்றல் பெற்ற ஆசிரியர் (மகரிஷி) பாடம் சொல்லிக் கொடுத்தார். பல மாணவர்கள் படித்தனர். கல்விக்காலம் முடிந்து ஊருக்குச் செல்ல மாணவர்கள் தயாராக இருந்த நிலையில் "கௌத்ஸர்சு என்ற ரிஷிகுமாரன் ஆசிரியரை வணங்கி தங்களுக்கு ஏதாவது குருதட்சணை கொடுக்காமல் செல்லமாட்டேன் என்று பிடிவாதமாகக் கூற, ஆசிரியரும் பலமுறை சொல்லியும் கேளாத மாணவனை, "நீ கற்ற கல்விக்கு ஒரு கல்விக்கு ஒரு கோடி பொன் வீதம் கொடு" என்றார்.     மாணவன் திகைத்தான். ஆசிரியர் கேட்டதைக் கொடுக்க  என்ன செய்யலாம்? என  சிந்தித்தான். அவர் அனுக்கிரஹம் கட்டாயம் கிடைக்கும் என்று நம்பினான். பசி தாகம் மறந்தான். கால் போன வழி நடந்தான். பலநாள் நடந்து அயோத்தி மாநகர் எல்லையை அடைந்தான்.     பலர் செல்வங்களோடு ஆனந்தமாக வாழ்ந்த கொண்டிருந்தனர். அதைப் பார்த்து ஆனந்தப்பட்டாலும் முகம் வாடியிருந்தது. அதைக்கண்டவர்கள், "சிறுவனே! ஏன் முகம் வாடி இருக்கிறாய்" என்று கேட்டனர். தன்னிலையை கூறினான். "கவலைப்படாதே" ரகுமஹாராஜா ஆனந்தமாக அயோத்தியில் "விஸ்வஜித்" என்ற யாகத்தை முறைப்படி செய்து முடித்து அனைவருக்கும் தானதர்மங்கள் செய்கிறான். நீயும் போனால் உன் கவலை தீரும் என்றனர். அவன் அங்கு சென்றான்.     அந்தோ பரிதாபம், அரசன் செல்வம் அனைத்தையும் செலவிட்டு விட்டான். பொன் வட்டிலால் வந்தவர்களின் பாதபூஜை செய்பவன் மண்பாத்திரம் கொண்டு பாதபூஜை செய்யலானான். பார்த்த சிறுவன் வாய் மூடி மௌனமானான். அரசனோ அவனை விடவில்லை. வந்த காரணத்தை வினவினான். மாணவன் கூறலானான். அரசே     "நிர்பந்த சஞ்சாத ருஷார்த்தகார்ஸ்யம்     அசிந்தயித்வாகுரு ணாஹமுக்த:     வித்தய்யவித்யா பரிசங்க்யயாமே     கோடீஸ் சதஸ்ரம்தசசாஹரேதி"     என்றான். அதாவது என்னால் நிர்பந்தப்படுத்தப்பட்ட ஆசிரியர் எனக்கு கற்ற கல்வி 14-க்கும் 14 கோடி பொன் கேட்க, குருவிற்கு கொடுக்க அதனை யாசிக்க வந்தேன் என்றான்.         மகரிஷி குமாரனிடம், "இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? வேண்டிய திரவ்யங்களை கொடுக்கிறேன்" என்று கூறிவிட்டு குபேரன் வாழிடம் நோக்கி போர்முரசு கொட்டச் செய்ய அதை அறிந்த குபேரன் ரகுவின் பொக்கிஷத்தை (பணமழையாக) "பவுன் மழையாக" பொழிந்து நிரப்பிவிட அனைத்தையும் கௌத்ஸரை பெற்றுக் கொள்ள வேண்டினான். அவரும் குருவின் (ஆசார்யனின்) அனுக்கிரஹமாக 14 கோடி பவுன் மட்டும் பெற்று குரு தட்சணை கொடுத்து மனநிறைவு பெற்றான்.     அவர் பெற்றது போல்  சாந்தீபினி கண்ணன் மூலம் குரு காணிக்கையாக தன்னுடைய மாண்டுபோன புத்திரர்களையும் காலவர் மூலமும் 600 இச்சை காதுள்ளி குதிரைகளையும் குருதட்சணையாக பெற்றனர். ஸ்வாமி ராமாநுஜரோ பரமாசார்யர் ஆளவந்தார் அனுக்கிரஹம் பெற்று பல செயற்கரிய செயல்களை செய்து முடித்தார். ஆகவே ஆசார்யன் சிஷ்டாசாரத்துடன் அனுக்கிரஹித்தால் சிஷ்யனும் ஆசார்யனே கதி என்று செயல்பட்டால் அனைத்து செயலும் நடக்கும். வெற்றிவாகை சூடும் என்பது நாம் அறியும் பேருண்மையாகும்.

ஆலிலை மேல் பள்ளி கொண்ட அழகிய பாலகன்

                                                     -  G.R. சுப்பிரமணியன், மதுரை


    அந்தக் குழந்தையைப் பார்த்தவர் மனம் பரவசமடையும். தெய்வீகக் குழந்தை. எடுத்துக் கொஞ்சலாம் போல கொள்ளையழகு. கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கத்தோன்றும். துருதுருவென விழிகள். சின்னச் சின்ன கைகள்; பிஞ்சு விரல்கள்; சின்னச் சின்ன சங்கு சக்கரங்கள்; மார்பில் ஸ்ரீ வத்ஸமாலை. கழுத்தில் கௌஸ்துப மணி. இடுப்பில் அழகிய சின்ன பட்டு பீதாம்பரம். மரகதவண்ண மேனி; நீருண்ட மேகம்போல குளிர்ச்சியான நீல மேக ஸ்யாமளன். பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும் பாலகன்.
    ஆம். அவன் தான் பாலகிருஷ்ணன். தேவகி - வசுதேவன் மைந்தனாகப் பிறந்து கோகுலத்தில் யசோதை -நந்தகோபன் பாலனாக வளரும் அதிசயக்குழந்தை
    அழகிய திருமுக மண்டலம். நீலோத்பல மலர்கள் போன்ற திவ்ய நேத்திரங்கள். அழகான திருமார்பு. அழகான கைகள். சக்கரரேகை ஓடும் அழகிய பாதங்கள். அடேயப்பா! என்ன அழகு! என்ன அழகு!
    சாதாரணமாக குழந்தை பிறந்த பின்பே, பெற்றோர் அதற்குத் தங்க ஆபரணங்கள் சூட்டி அழகு பார்ப்பார்கள். இதுவோ வித்தியாசமான தெய்வக் குழந்தை. பிறக்கும்போதே நிறைய பொன்னாபரணங்களுடன் பிறந்த குழந்தை. விலையுயர்ந்த நகைகள் என்ன? கிரீட, குண்டலங்கள் என்ன? கால்களில் வெள்ளிக் கொலுசு என்ன? இடுப்பில் புல்லாங்குழல் என்ன? சுருள் சுருளாக கரு, கருவென கருத்த அடர்த்தியான கேசம் என்ன? கழுத்தை அலங்கரிக்கும் மணி மாலை என்ன? இடுப்பில் ஒட்டியாணம் என்ன?கைகளில் வளையல்கள் என்ன? தலையில் மயிற்பீலி என்ன? கண்ணன் திவ்யாபரணங்களை அணிந்தால் அவற்றிற்கு அழகா? அல்லது ஆபரணங்களால் அவனுக்கு அழகா? என்ன சொல்வது?    உதட்டில் எப்போதும் புன்னகை. பிரசன்ன வதனம். அவனது புன்சிரிப்பு அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுமே! இந்த அழகிய திருமேனியைப் பார்த்துத்தானே ஆண்டாள் நாச்சியார், கிருஷ்ண சைதன்யர், ஜயதேவர், லீலாசுகர், பாரதியார் ஆகியோர் மெய்ம்மறந்து போனார்கள்.
    அந்தக் குழந்தை ஆலிலைமேல் பள்ளி கொண்டிருக்கிறது. கால் கட்டை விரலை எடுத்துத் தன் பிஞ்சு வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறது.
    வாமனனாய், குள்ளனாய் வந்தபோது மூவடி மண் கேட்டு பலியிடம் யாசகம் வேண்டியபோது, ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து, இன்னொரு பாதத்தைப் பிரம்மலோகம் வரை தூக்கி நின்றான். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று பலியிடம் கேட்ட போது,  பலிச்சக்கரவர்த்தித் தன் சிரசைக் காட்டினான். பலியின் சிரசில் தன் திருவடியைப் பதித்து, அவனது ஆணவத்தைப் போக்கி, தடுத்தாட்கொண்டான்.
    தூக்கிய திருவடியைக் கண்ட பிரம்மன், அந்த அழகிய திருப்பாதங்களைப் புனித நீரால் அபிஷேகம் செய்தான்.
    இராமனாக அவதரித்தபோது, இந்தத்திருவடிகள் தானே அகலிகையின் சாபத்தைப் போக்கியது.
    கங்கையைக் கடக்க இராமன் படகில் ஏறும் முன், குகன் அவனது பாதங்களைக் கழுவ விரும்பினான். ஏன் அப்படி என்று இராமன் கேட்க, ஏற்கனவே உன் திருவடிபட்டு ஒரு கல் பெண்ணானாள். என்னுடைய படகோ மரத்தால் ஆனது. நின் திருவடிபட்டு, அதுவும் பெண்ணானால் நான் பிழைப்புக்கு என்ன செய்வது? ஆகவே நின் திருவடிகளைத் திருமஞ்சனம் செய்ய விரும்புகிறேன் என்றான். குகனின் இந்தச் சாதுர்யமான வார்த்தைகளைக் கேட்ட இராமன் மனம் மகிழ்ந்து. தன் பாதங்களை அபிஷேகம் செய்யச்  சம்மதித்தான்.
    இப்படி எல்லோரும் திருவடிகளைப் போற்றுகின்றார்களே! அதில் என்ன தான் இருக்கிறது என்று அறிய கண்ணன் தன் கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டானாம்.
    இதைப் பக்தன் பார்த்தான். மெய்ம் மறந்து பாடுகிறான்.
    கரார விந்தனே பதார விந்தம்
    முகார விந்தே விளி வேஸயந்தம்
    வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
    பாலம் முகுநிதம் மனசாஸ் மராமி
    ஆலிலை மேல் துயில் கொள்ளும் பாலகோபாலன் தன் கையாகிய தாமரையால், காலாகிய தாமரையை எடுத்து முகமாகிய (வாய்) தாமரையில் வைத்துச் சுவைத்துப் பார்க்கின்றான்.
    அந்த அதிசய பாலமுகுந்தனை நாம் மனதாரப் போற்றுவோம்.